கர்நாடகா அணைகளின் நீர்மட்டம் குறைகிறது
கர்நாடகா அணைகளின் நீர்மட்டம் குறைகிறது
கர்நாடகா அணைகளின் நீர்மட்டம் குறைகிறது
ADDED : மார் 11, 2025 11:05 PM
பெங்களூரு; கர்நாடகாவில் கோடை காலம் வந்தால், தண்ணீர் தட்டுப்பாடு தலையாய பிரச்னையாக மாறிவிடும். இது, தேசிய அளவில் பேசு பொருளாக மாறும். குறிப்பாக, பெங்களூரில் கோடை காலத்தில் தண்ணீர் பிரச்னை அதிகமாகும். பெங்களூரில் கடந்த ஆண்டு மக்கள் தண்ணீருக்கு மிகவும் கஷ்டப்பட்டனர். ஆனால், குடிநீர் வாரியம் சமாளித்தது.
தண்ணீர் தேவையை தீர்ப்பதில் மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ள லிங்கனமக்கி, சுபா, வராஹி, ஹாரங்கி, ஹேமாவதி, கே.ஆர்.எஸ்., கபினி, பத்ரா, துங்கபத்ரா, கட்டபிரபா, மலபிரபா, அலமாட்டி, நாராயணபுரா, வாணிவிலாஸ் சாகர் ஆகிய 14 அணைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்த அணைகளில் உள்ள நீர்மட்டம் குறித்து நேற்று, கர்நாடக மாநில தேசிய பேரிடர் கண்காணிப்பு கமிட்டி தரவுகளை வெளியிட்டுள்ளது.
அதில் குறிப்பிட்டு உள்ளதாவது:
இந்த 14 அணைகளின் மொத்த கொள்ளளவு 895 டி.எம்.சி., ஆகும். தற்போது, 436 டி.எம்.சி., அளவிற்கு தண்ணீர் உள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 144 டி.எம்.சி., அதிகமாகவே உள்ளது. இருப்பினும், அணைகளின் நீர்மட்டம் குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரியில் அணைகளில் நீர்மட்டம் முழு கொள்ளவை எட்டியது. இந்நிலையில், விவசாயத்திற்காக கடந்த மாதம் நீர் திறக்கப்பட்டது. இதனால், அணையில் நீர்மட்டம் பாதியாக குறைந்துள்ளது. தற்போது, குடிநீர் தேவைக்காக தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, கர்நாடகாவின் வட மாவட்டங்களில் உயிர்நாடியாக உள்ள கிருஷ்ணா நதியின் மீது அமைந்துள்ள அலமாட்டி அணையில் 22 சதவீதம் மட்டுமே தண்ணீர் உள்ளது.
இதே நிலை நீடித்தால், அடுத்த மூன்று மாதங்களுக்குள் அணை வறண்டு போகும் வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.