விசா மோசடி வழக்கு: கார்த்திக்கு ஜாமின்
விசா மோசடி வழக்கு: கார்த்திக்கு ஜாமின்
விசா மோசடி வழக்கு: கார்த்திக்கு ஜாமின்
ADDED : ஜூன் 07, 2024 01:41 AM

புதுடில்லி, சீன ஊழியர்களுக்கு முறைகேடாக விசா பெற்று தந்த வழக்குடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில், காங்கிரஸ் எம்.பி., கார்த்திக்கு டில்லி உயர் நீதிமன்றம் நேற்று ஜாமின் வழங்கியது.
கடந்த 2011ல் மத்தியில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம், உள்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார்.
அப்போது பஞ்சாபில் மின் உற்பத்தி நிலையத்தை அமைக்கும் பணியில் தனியார் நிறுவனம் ஈடுபட்டிருந்தது.
மின் நிலையத்தின் கட்டமைப்பு பணியில் சீனாவைச் சேர்ந்த தொழில்நுட்ப பொறியாளர்கள் பணியாற்றி வந்தனர்.
அவர்களுக்கான விசா காலம் முடிவடைந்த நிலையில், விசாவை மீண்டும் நீட்டிக்க மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதியை பெற வேண்டி இருந்தது.
காங்கிரஸ் எம்.பி., கார்த்தியின் உதவியை நாடி, தனியார் மின் நிறுவனம், விசா நீட்டிப்பை பெற்றதாகவும், இதற்காக 50 லட்சம் ரூபாய், அவருக்கு லஞ்சமாக தரப்பட்டதாகவும் புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் அமலாக்கத் துறை வழக்கு பதிந்து உள்ளது.
கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான குற்றப்பத்திரிகை டில்லி அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அதை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்த போது, நேற்று நேரில் ஆஜராக கார்த்திக்கு சம்மன் அனுப்பியது.
அதை ஏற்று கார்த்தி நேற்று நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், அவருக்கு சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா நிபந்தனை ஜாமின் வழங்கினார்.