பா.ஜ., -- எம்.பி., கங்கனாவை அறைந்த காவலர் 'சஸ்பெண்ட்'
பா.ஜ., -- எம்.பி., கங்கனாவை அறைந்த காவலர் 'சஸ்பெண்ட்'
பா.ஜ., -- எம்.பி., கங்கனாவை அறைந்த காவலர் 'சஸ்பெண்ட்'
ADDED : ஜூன் 07, 2024 01:43 AM

சண்டிகர், பா.ஜ., - எம்.பி.,யாக தேர்வாகியுள்ள பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்தை, சண்டிகர் விமான நிலையத்தில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த பெண் காவலர் கன்னத்தில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, அந்த பெண் காவலர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
ஹிமாச்சல பிரதேசத்தின் மண்டி லோக்சபா தொகுதியில் பா.ஜ., சார்பில் களமிறங்கிய கங்கனா ரணாவத், அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விக்ரமாதித்ய சிங்கை, 74,755 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
இதன் வாயிலாக, ஹிமாச்சல் மாநிலத்தில் இருந்து தேர்வான நான்காவது பெண் எம்.பி., என்ற பெருமையை பெற்றார்.
இந்நிலையில், டில்லியில் பா.ஜ., சார்பில் எம்.பி.,க்கள் கூட்டத்துக்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க, கங்கனா நேற்று மாலை 3:00 மணிக்கு சண்டிகர் விமான நிலையத்திற்கு சென்றார். அங்கு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சி.ஐ.எஸ்.எப்., எனப்படும் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையைச் சேர்ந்த பெண் காவலரான குல்வீந்தர் கவுர், கங்கனாவை தடுத்து நிறுத்தி சோதனையிட்டார்.
அப்போது, அவரிடம் பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் குறித்து கங்கனா கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதில், அந்த பெண் காவலர் ஆத்திரமடைந்து கங்கனாவின் கன்னத்தில் அறைந்ததாக தகவல் வெளியானது.
இதனால், விமான நிலைய வளாகத்தில் கங்கனா வாக்குவாதத்தில் ஈடுபடுவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவின.
இந்த விவகாரத்திற்கு பின் கங்கனா டில்லி புறப்பட்டு சென்றார். அங்கு விமானத்தில் இருந்து தரையிறங்கியதும், சி.ஐ.எஸ்.எப்., இயக்குனர் நினா சிங்கை சந்தித்து புகார் அளித்தார்; அத்துடன், அப்பெண் பாதுகாவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
இப்புகாரின்படி, பெண் காவலர் உடனே சஸ்பெண்ட் செய்யப்பட்டதுடன், அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, இச்சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்கும் வகையில், பா.ஜ., - எம்.பி., கங்கனா, சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அதில் அவர், 'பஞ்சாபில் நடந்த விவசாயிகள் போராட்டத்தின் போது, காலிஸ்தான் அமைப்பினருக்கு ஆதரவாக பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்ததற்கு, என் மீது அப்பெண் காவலர் தாக்கினார். இச்சம்பவம் குறித்து, மத்திய உள்துறை அமைச்சகத்திடமும் புகார் தெரிவித்துள்ளேன்' என, குறிப்பிட்டுள்ளார்.