மணிப்பூரில் மீண்டும் வன்முறை காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு
மணிப்பூரில் மீண்டும் வன்முறை காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு
மணிப்பூரில் மீண்டும் வன்முறை காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு
ADDED : ஜூன் 07, 2024 11:03 PM

இம்பால்: மணிப்பூரில் 59 வயது நபர் கொல்லப்பட்டதை அடுத்து, வன்முறை வெடித்ததால், அங்கு காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம், கூகி மற்றும் மெய்டி சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. தொடர்ந்து ஒன்பது மாதங்களுக்கு மேலாக அடுத்தடுத்து நடந்த வன்முறை சம்பவங்களில், 200க்கும் மேற்பட்டோர் பலியாகினர்; ஏராளமானோர் வீடுகளை இழந்தனர். மத்திய மற்றும் மாநில அரசின் முயற்சியால் இயல்பு நிலை திரும்பி வருகிறது.
இந்நிலையில், ஜிரிபாம் மாவட்டத்தைச் சேர்ந்த சோய்பாம் சரத்குமார் சிங், 59, என்ற விவசாயி நேற்று முன்தினம் திடீரென மாயமானார். கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது உடல் நேற்று மீட்கப்பட்டது.
இதையடுத்து, கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, சோய்பாமின் உறவினர்கள் மற்றும் ஜிரிபாம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் நேற்று திடீர் போராட்டத்தில் குதித்தனர்.
அப்போது, ஜிரிபாம் பகுதியில் இருந்த கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன; இரு சக்கர வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.
இதையடுத்து, மாவட்டம் முழுதும் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக தெரிவித்த மாவட்ட நிர்வாகம், வன்முறை தொடர்பாக பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம் என பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.