காங்., உறுப்பினர் எண்ணிக்கை லோக்சபாவில் அதிகரிப்பு
காங்., உறுப்பினர் எண்ணிக்கை லோக்சபாவில் அதிகரிப்பு
காங்., உறுப்பினர் எண்ணிக்கை லோக்சபாவில் அதிகரிப்பு
ADDED : ஜூன் 07, 2024 11:11 PM

புதுடில்லி: மஹாராஷ்டிராவின் சாங்லி லோக்சபா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வென்ற விஷால் பாட்டீல், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்துள்ளதை அடுத்து, அக்கட்சியின் எம்.பி.,க்கள் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துஉள்ளது.
மஹாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் வசந்த்தாதா பாட்டீலின் பேரன் விஷால் பாட்டீல். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர், மஹாராஷ்டிராவின் சாங்லி லோக்சபா தொகுதியில் போட்டியிட 'சீட்' கேட்டார்.
ஆனால், அந்த தொகுதி, கூட்டணி கட்சியான சிவசேனா உத்தவ் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த விஷால், அதே தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வென்றார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறிய அவர், அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா மற்றும் ராகுலை நேற்று முன்தினம் சந்தித்து ஆதரவு கடிதத்தை அளித்தார்.
இதன் வாயிலாக, லோக்சபாவில் காங்., - எம்.பி.,க்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல, லோக்சபா தேர்தலுக்கு முன், பீஹாரில் தன் சொந்த கட்சியை காங்.,குடன் இணைத்த பப்பு யாதவ், புர்னியா தொகுதியில் போட்டியிட சீட் கேட்டார்.
அந்த தொகுதி, கூட்டணி கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு ஒதுக்கப்பட்டதால், அவர் சுயேச்சையாக போட்டியிட்டு அங்கு வெற்றி பெற்றுள்ளார். அவரும் காங்கிரஸ் கட்சிக்கு தன் ஆதரவை அளிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.