விஜயேந்திரா பதவிக்கு 'வேட்டு'; எதிரணியினர் ரகசிய ஆலோசனை
விஜயேந்திரா பதவிக்கு 'வேட்டு'; எதிரணியினர் ரகசிய ஆலோசனை
விஜயேந்திரா பதவிக்கு 'வேட்டு'; எதிரணியினர் ரகசிய ஆலோசனை
ADDED : ஆக 02, 2024 11:22 PM

பெங்களூரு : கர்நாடக சட்டசபை தேர்தல் முடிந்த பின், பா.ஜ., தலைவராக இருந்த நளின்குமார் கட்டீலை மாற்ற மேலிடம் நினைத்தது. அப்போது, முன்னாள் அமைச்சர்கள் ரவி, அசோக், அரவிந்த் லிம்பாவளி, பசனகவுடா பாட்டீல் எத்னால் உட்பட பலர், மாநிலத் தலைவர் பதவியை எதிர்பார்த்தனர்.
மூத்த தலைவர்களை ஓரங்கட்டிய மேலிடம், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவை, மாநிலத் தலைவராக நியமித்தது.
பதவி எதிர்பார்த்த தலைவர்கள் அதிருப்தி அடைந்தனர். எத்னால் பகிரங்கமாகவே எடியூரப்பாவை விமர்சித்தார்.
சட்டசபையிலும் கூட, சொந்தக் கட்சியினரை விமர்சித்து, தலைவர்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்தினார்.
'மூடா' முறைகேடு தொடர்பாக முதல்வர் ராஜினாமா செய்ய வலியுறுத்தி மாநில தலைவர் விஜயேந்திரா, எதிர்க்கட்சித் தலைவர் அசோக் ஆகியோர் தலைமையில் இன்று பாதயாத்திரை துவங்குகிறது.
ஆனால், இந்த பாதயாத்திரையில் பங்கேற்காமல், வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேட்டை கண்டித்து, தனியாக பாதயாத்திரை நடத்த ரமேஷ் ஜார்கிஹோளி, எத்னால் திட்டமிட்டுள்ளனர்.
அது மட்டுமின்றி, விஜயேந்திராவை மாநிலத் தலைவர் பதவியில் இருந்தும், கீழே இறக்க திரைமறைவில் முயற்சிக்கின்றனர்.
இதுகுறித்து ஆலோசிக்க, நேற்று முன் தினம் ரகசிய கூட்டம் நடத்தினர். இதில் முன்னாள் எம்.பி., பிரதாப் சிம்ஹா, முன்னாள் அமைச்சர்கள் குமார் பங்காரப்பா, பசனகவுடா பாட்டீல் எத்னால் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.
பெங்களூரு, சதாசிவ நகரில் உள்ள குமார் பங்காரப்பாவின் இல்லத்தில் இந்த கூட்டம் நடந்துள்ளது. அப்போது தற்போதைய அரசியல் நிலவரம், பா.ஜ.,வின் பாதயாத்திரை என, பல விஷயங்கள் தொடர்பாக ஆலோசனை நடந்ததாக கூறப்படுகிறது.
மேலும் பல அதிருப்தி தலைவர்களை சேர்த்து மற்றொரு கூட்டம் நடத்தி, 'விஜயேந்திரா, காங்கிரஸ் தலைவர்களுடன் உள் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார்.
பா.ஜ.,வுக்கு எதிராக நடந்து கொள்கிறார்' என, கட்சி மேலிடத்திடம் புகார் அளிக்க தயாராவதாக கூறப்படுகிறது.
விரைவில் பெங்களூரு புறநகரில், ஆலோசனை கூட்டம் நடக்கவுள்ளது. அப்போது எடியூரப்பாவின் எதிரிகளும் பங்கேற்க வாய்ப்புள்ளது.
இந்த விவகாரங்களால், எடியூரப்பா எரிச்சல் அடைந்துள்ளார்.