பல்கலை வளாகத்தில் வாகன தடை: அரசுக்கு மேலவை தலைவர் கடிதம்
பல்கலை வளாகத்தில் வாகன தடை: அரசுக்கு மேலவை தலைவர் கடிதம்
பல்கலை வளாகத்தில் வாகன தடை: அரசுக்கு மேலவை தலைவர் கடிதம்
ADDED : ஜூன் 13, 2024 04:46 PM

பெங்களூரு:மாணவர்கள் நலன் கருதி பெங்களூரு பல்கலைக்கழக வளாகத்திற்குள், பொது வாகனங்கள் செல்ல தடை விதிக்கும்படி, கர்நாடக அரசுக்கு, மேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி கடிதம் எழுதியுள்ளார்.
பெங்களூரு ஞானபாரதியில் பெங்களூரு பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். பல்கலைக்கழக வளாகம் வழியாக செல்லும் சாலை, நாகரபாவி உட்பட சில பகுதிகளை இணைக்கிறது.
இதனால் பல்கலைக்கழக வளாகம் வழியாக, ஏராளமான வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன. அந்த சாலையில் வாகனங்கள் வேகமாக செல்வதால், மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக அந்த சாலையில், அடிக்கடி விபத்துகளும் நடக்கின்றன.
கடந்த ஆண்டு பல்கலைக்கழக மாணவியான கோலாரின் ஷில்பா, 22 என்பவர், பி.எம்.டி.சி., பசியில் இருந்து தவறி விழுந்து இறந்தார். இதையடுத்து பல்கலைக்கழக வளாகத்திற்குள் பொது வாகனங்கள் செல்ல, தடை விதிக்க வேண்டும் என்று மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
அதன்பின், பல்கலைக்கழக வளாக சாலை வழியாக வாகனங்கள் செல்ல, தடை விதிக்கப்பட்டது. மாணவர்களின் வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், தற்போது பொது வாகனங்களும் சென்று வருவதாக கூறப்படுகிறது. இதனால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கர்நாடக மேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி, அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், 'பெங்களூரு பல்கலைக்கழக வளாக சாலையில் பொது வாகனங்கள் செல்வதால், மாணவர்கள் பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். இதை நான் நேரில் பார்த்துள்ளேன். மாணவர்களின் நலன் கருதி, பல்கலைக்கழக சாலைக்குள் பொது வாகனங்கள் செல்ல, உடனடியாக தடை விதிக்க வேண்டும். இது தொடர்பாக அதிகாரிகளுடன் விரைவில் ஆலோசனை நடத்த வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.