Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ சுற்றுலா பயணியரின் சொர்க்க பூமி உடுப்பி

சுற்றுலா பயணியரின் சொர்க்க பூமி உடுப்பி

சுற்றுலா பயணியரின் சொர்க்க பூமி உடுப்பி

சுற்றுலா பயணியரின் சொர்க்க பூமி உடுப்பி

ADDED : ஜூன் 05, 2024 10:07 PM


Google News
Latest Tamil News
உடுப்பி மாவட்டத்தை, சுற்றுலா பயணியரின் சொர்க்கம் என அழைக்கின்றனர். இங்கு ஏராளமான சுற்றுலா தலங்கள், கடற்கரைகள், கோவில்கள் உள்ளன. பக்தர்களுக்கும், சுற்றுலா பயணியருக்கும் தகுந்த இடமாகும்.

கர்நாடகாவில் பல சுற்றுலா தலங்கள் இருந்தாலும், உடுப்பி என்றால் சுற்றுலா பயணியருக்கு தனி விருப்பம். கடலோர மாவட்டமான உடுப்பியில் மனதை உற்சாகப்படுத்தும் இடம் என்றால், அது மல்பே கடற்கரை. மனதுக்கு அமைதி தரும் இடம் என்றால் கிருஷ்ணர் மடம். இதுபோன்ற பல கோவில்கள், கடற்கரைகள் உள்ளன.

ஆண்டின் அனைத்து பருவ காலங்களிலும், உடுப்பியின் சுற்றுலா தலங்கள் சுற்றுலா பயணியரை சுண்டி இழுக்கின்றன. நகரின் 6 கி.மீ., தொலைவில் மல்பே கடற்கரை உள்ளது. இது மிகவும் பாதுகாப்பான கடற்கரை என, அழைக்கப்படுகிறது.

டிசம்பர் முதல் மே இறுதி வரை, சுற்றுலா பயணியருக்காக, வாட்டர் கேம்ஸ் திறந்திருக்கும். மல்பே கடற்கரை பார்க்க மட்டுமின்றி, நீரில் விளையாடவும் பாதுகாப்பானது. இதே காரணத்தால் குடும்பத்துடன் வருகின்றனர்.

கிருஷ்ணர் மடம்


உடுப்பி நகரில் கிருஷ்ணர் மடம் உள்ளது. இது மிகவும் அற்புதமான புராதன கோவிலாகும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, மடத்தில் நடக்கும் திருவிழா மிகவும்பிரசித்தி பெற்றதாகும்.

இதை காண உள்நாடு, வெளி நாடுகளில் இருந்து பல ஆயிரக்கணக்கான கிருஷ்ண பக்தர்கள் வருகை தருவர். மடத்தில் நடக்கும் பூஜைகளில், குடும்பத்துடன் பங்கேற்பர்.

செயின்ட் மேரீஸ் தீவு


மல்பே கடற்கரையில் இருந்து, படகில் ஒரு மணி நேரம் பயணித்தால், செயின்ட் மேரீஸ் தீவை அடையலாம். மிகவும் அற்புதமான தீவாகும். இது சுற்றுலா பயணியரின் சொர்க்கமாகும். இந்த தீவுக்கு படகில் செல்வது, மறக்க முடியாத அற்புத அனுபவமாக இருக்கும்.

காபு லைட் ஹவுஸ்


மங்களூரில் இருந்து, உடுப்பிக்கு வரும் போது வழியில் படுபிதரே கடற்கரையை கடந்து சென்றால், காபு லைட் ஹவுசை காணலாம். மிகவும் அழகான கடற்கரை, சுற்றுலா தலங்கள், லைட் ஹவுஸ் உள்ள இடம் காபு. லைட் ஹவுசை காண, பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகின்றனர்.

லைட் ஹவுஸ் மீது ஏறி நின்று, கடலை பார்த்தால் மனதை கொள்ளை கொள்ளும் காட்சியாக இருக்கும். உடுப்பிக்கு வருவோர், காபு லைட் ஹவுசை பார்க்க தவறுவதில்லை. எப்போதும் சுற்றுலா பயணியர் நிரம்பியுள்ளனர்.

கொல்லுார் மூகாம்பிகை


உடுப்பியின், கொல்லுாரில் உள்ள மூகாம்பிகை கோவில், தென்னகத்தின் பக்தர்களை ஈர்க்கும் கோவிலாகும். தமிழகம், கேரளா, ஆந்திரா உட்பட, பல்வேறு மாநிலங்களில் இருந்தும், பக்தர்கள் வருகின்றனர்.

சவுபர்ணிகா ஆற்றங்கரையில், கொடசாத்ரி மலைகளின் அடிவாரத்தில் குடிகொண்டுள்ள மூகாம்பிகை கோவிலை, ஆதி சங்கராச்சாரியார் கட்டினார்.

பெங்களூரில் இருந்து 430 கி.மீ., மங்களூரில் இருந்து 130 கி.மீ., தொலைவில் கொல்லுார் மூகாம்பிகை கோவில் உள்ளது.

இதன் அருகிலேயே மங்களூரு விமான நிலையம் உள்ளது. பைந்துாரில் இருந்து ரயில் வசதி உள்ளது. மங்களூரில் இருந்து, கொல்லுாருக்கு தனியார் பஸ் வசதி உள்ளது. குந்தாபுரா அல்லது பைந்துாரில் இருந்து, டாக்சியிலும் வரலாம்.

ஒத்தினெஜே கடற்கரை


உடுப்பியின், பைந்துாரில் ஒத்தினெஜே கடற்கரை உள்ளது. இங்குள்ள கடலை, 'சோமேஸ்வர கடல்' என, அழைக்கின்றனர். இப்பகுதியின் மேற்கு திசையில் அரபிக்கடல்; கிழக்கு திசையில் சுமனா ஆறு ஓடுகிறது. இவை இரண்டும் கலக்கும் இடத்தில், அழகான தீவு உருவாகியுள்ளது.

இந்த தீவை ஒத்தினெஜே தீவு என, அழைக்கின்றனர். சோமேஸ்வரா கோவில் கடலின் அருகிலேயே உள்ளது. சிறிது துாரத்தில் மலை மீது விருந்தினர் இல்லம் கட்டப்பட்டுள்ளது. மலை மேலிருந்து கடற்கரையை பார்த்தால் அரபிக்கடல், சுமனா ஆறு கலப்பதை முழுமையாக பார்க்கலாம்.

கமலஷிலே கோவில்


உடுப்பியின், குந்தாபுராவில் இருந்து 35 கி.மீ., தொலைவில் கமலஷிலே கோவில் உள்ளது. இது உயரமான மலை, சுற்றிலும் வனப்பகுதி நடுவில் இந்த கோவில் உள்ளது. கோவில் அருகில் பாயும் புக்ஜா ஆறு, கமலஷிலே அழகை அதிகரிக்கிறது. கமலஷிலே என்பது, புராதனமான பிராம்ஹி துர்கா பரமேஸ்வரி கோவில்.

ஆகும்பே சன்செட்


ஆகும்பே மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு சிறிய கிராமம். பெங்களூரில் இருந்து 350 கி.மீ., தொலைவில் உள்ளது. ஆகும்பே மேகாலயாவின் சிரஞ்சீவிக்கு பின், அதிகமான மழை பெய்யும் இடமாகும். எனவே இதனை கர்நாடகாவின், சிரபுஞ்சி என, அழைக்கின்றனர்.

ஆகும்பேவில் இருந்து, சூர்ய அஸ்தமனத்தை பார்ப்பது, மிகவும் அற்புதமான காட்சியாக இருக்கும். இந்த காட்சி தொலைவிலுள்ள சுற்றுலா பயணியரை ஈர்க்கிறது. சூர்ய அஸ்தமனத்தை காண, சன் செட் பாக்ஸ் உள்ளது. இங்கிருந்து சூர்ய அஸ்தமனத்தை காணலாம்.

கூட்லு தீர்த்தா


உடுப்பி - ஆகும்பே சாலையின், ஹெப்ரி அருகில் கூட்லு தீர்த்தா நீர் வீழ்ச்சி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளின், அடர்ந்த கானகத்தின் நடுவில் பாயும் சீதா ஆற்றில் இருந்து உருவானது கூட்லு தீர்த்தா.

இது ரம்யமான நீர் வீழ்ச்சியாகும். 300 அடி உயரத்தில் இருந்து, கீழே பாய்கிறது. நீர் வீழ்ச்சியின் கீழே இயற்கையாக குளம் அமைந்துள்ளது. அடர்த்தியான வனப்பகுதியில்1.5 கி.மீ., தொலைவில் நடந்து சென்றால், கூட்லு நீர் வீழ்ச்சியை காணலாம். கரடு, முரடான பாதையில் செல்ல வேண்டும்.

- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us