உத்தவ் தாக்கரே -பட்னவிஸ் திடீர் சந்திப்பால் பரபரப்பு
உத்தவ் தாக்கரே -பட்னவிஸ் திடீர் சந்திப்பால் பரபரப்பு
உத்தவ் தாக்கரே -பட்னவிஸ் திடீர் சந்திப்பால் பரபரப்பு
ADDED : ஜூன் 28, 2024 01:49 AM

மும்பை: மஹாராஷ்டிராவில், எதிரெதிர் அணியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர்களான உத்தவ் தாக்கரே மற்றும் தேவேந்திர பட்னவிஸ் திடீரென சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
மஹாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா, பா.ஜ., தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு துணை முதல்வர்களாக தேவேந்திர பட்னவிஸ் மற்றும் அஜித் பவார் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில், மஹாராஷ்டிரா சட்ட சபையின் மழைக்கால கூட்டத் தொடர் நேற்று துவங்கியது.
இதில் பங்கேற்க மும்பையில் உள்ள சட்டசபைக்கு, முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் வந்தனர்.
அப்போது, லிப்டுக்காக காத்திருந்த போது, அங்கு பா.ஜ.,வைச் சேர்ந்த துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் வந்தார்.
தற்செயலாக நிகழ்ந்த இந்த சந்திப்பின் போது, இருவரும் பரஸ்பர மரியாதையுடன் ஓரிரு வார்த்தைகள் பேசிக் கொண்டனர். பின், லிப்ட வந்ததும் இருவரும் சென்றனர்.
இதுகுறித்து பதிலளித்த சிவசேனா உத்தவ் பிரிவின் தலைவர் உத்தவ் தாக்கரே, “வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு எங்கள் சந்திப்பு பல்வேறு யூகங்களை ஏற்படுத்தும்.
''அப்படி எதுவும் இல்லை. இது ஒரு எதிர்பாராத சந்திப்பு. வேண்டும் என்றால், இனிவரும் காலங்களில் எங்கள் ரகசிய கூட்டங்களை லிப்டின் உள்ளேயே ஏற்பாடு செய்வோம்,” என, நகைச்சுவையாக பதிலளித்தார்.