தேசிய தேர்வு முகமை ஆபீசில் நுழைந்து காங்., மாணவர் அமைப்பினர் போராட்டம்
தேசிய தேர்வு முகமை ஆபீசில் நுழைந்து காங்., மாணவர் அமைப்பினர் போராட்டம்
தேசிய தேர்வு முகமை ஆபீசில் நுழைந்து காங்., மாணவர் அமைப்பினர் போராட்டம்
ADDED : ஜூன் 28, 2024 01:41 AM

புதுடில்லி: 'நீட்' தேர்வு முறைகேடுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பினர், டில்லியில் உள்ள என்.டி.ஏ., அலுவலகத்திற்குள் அதிரடியாக புகுந்து, உள்பக்கம் பூட்டு போட்டு கோஷமிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வின் வினாத்தாள், தேர்வுக்கு முன் வெளியானதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக பீஹார், மஹாராஷ்டிரா மற்றும் டில்லியில் சிலரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், வழக்கு சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த முறைகேடுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர், டில்லியில் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
பார்லிமென்டில் ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று உரையாற்ற வந்தபோது, காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணியினர் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதை தொடர்ந்து, நீட் தேர்வுகளை நடத்தும் என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமையின் டில்லி அலுவலகத்தை நோக்கி, காங்., மாணவர் அமைப்பான, இந்திய தேசிய மாணவர் சங்கத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்றனர்.
அலுவலகத்துக்குள் அதிரடியாக நுழைந்த அவர்கள், என்.டி.ஏ.,வுக்கு எதிரான சுவரொட்டிகளை அப்பகுதி முழுதும் ஒட்டினர். அலுவலகத்தை உள்பக்கமாக பூட்டிவிட்டு, என்.டி.ஏ., அலுவலகத்தை மூடும்படி கோஷமிட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சில நிமிடங்கள் அந்த அலுவலகமே மாணவர்களின் கட்டுப்பாட்டுக்கு சென்றது. போலீசார் வந்து அவர்களை அப்புறப்படுத்தி பாதுகாப்பை தீவிரப்படுத்தினர்.