நடுரோட்டில் பெண்ணை தாக்கிய திரிணமுல் காங்கிரஸ் நிர்வாகி
நடுரோட்டில் பெண்ணை தாக்கிய திரிணமுல் காங்கிரஸ் நிர்வாகி
நடுரோட்டில் பெண்ணை தாக்கிய திரிணமுல் காங்கிரஸ் நிர்வாகி
ADDED : ஜூலை 01, 2024 12:36 AM
கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமுல் காங்கிரசைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர், பொதுவெளியில் ஒரு பெண் உட்பட இருவரையும் அடித்து உதைத்த சம்பவம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்தின் சோப்ரா என்ற பகுதியில் பொது மக்கள் மத்தியில், நடுரோட்டில் ஒரு பெண் உட்பட இருவரையும் சரமாரியாக ஒரு நபர் அடித்து உதைக்கும் காட்சி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இதில் உள்ள நபரின் பெயர் தேஜாமுல் எனவும், சோப்ரா தொகுதியின் திரிணமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஹமீதுார் ரஹ்மான் என்பவரின் நெருங்கிய நண்பர் எனவும் கூறப்படுகிறது.
அப்பகுதியில் நிலவும் பிரச்னைகளை தீர்ப்பதாக கூறி, கட்டப்பஞ்சாயத்து செய்து வருவதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 'மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளதற்கு இதைவிட உதாரணம் தேவையில்லை' என, பா.ஜ., கம்யூனிஸ்ட் உட்பட எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.
இது தொடர்பாக திரிணமுல் காங்கிரஸ் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்காத நிலையில், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.