மக்கள் வசிக்கும் கன்டோன்மென்ட் மாநில அரசுகளிடம் ஒப்படைப்பு
மக்கள் வசிக்கும் கன்டோன்மென்ட் மாநில அரசுகளிடம் ஒப்படைப்பு
மக்கள் வசிக்கும் கன்டோன்மென்ட் மாநில அரசுகளிடம் ஒப்படைப்பு
ADDED : ஜூலை 01, 2024 12:49 AM

புதுடில்லி: நாடு முழுதும் உள்ள ராணுவ கன்டோன்மென்ட்களில், பொதுமக்கள் வாழும் பகுதிகளை ராணுவ கட்டுப்பாட்டில் இருந்து பிரித்து, மாநில அரசு வசம் ஒப்படைக்கும் பணியை மத்திய அரசு துவக்கி உள்ளது.
ராணுவ அமைச்சகத்துக்கு நாடு முழுதும் 18 லட்சம் ஏக்கர் நிலம் உள்ளது. இதில், பல்வேறு மாநிலங்களிலும் 1.61 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் 62 கன்டோன்மென்ட் பகுதிகள் உள்ளன.
ராணுவ தளம் அமைந்துள்ள பகுதி மற்றும் அதை சுற்றி ராணுவ கட்டுப்பாட்டின் கீழ் உள்ள குடியிருப்பு பகுதிகள் கன்டோன்மென்ட் என்று அழைக்கப்படுகின்றன.
இந்த குடியிருப்பு பகுதியில் ராணுவத்தினர் மட்டுமின்றி, பொது மக்களும் வசிக்கின்றனர். இந்த பகுதிகள் முழுக்க ராணுவ கட்டுப்பாட்டில் உள்ளன.
எனவே, மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சிகளின் நடைமுறைகள் இங்கு செல்லாது. இது, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அமலுக்கு வந்த வழக்கம்.
இதை நீக்க பல்வேறு முறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டது.
பொது மக்கள் வசிக்கும் கன்டோன்மென்ட் பகுதிகளுக்கு ராணுவ நிதியில் இருந்து செலவு செய்வது குறித்து, பார்லி., நிலைக்குழு சமீபத்தில் கேள்வி எழுப்பியது.
இதை தொடர்ந்து, கன்டோன்மென்ட்களில் பொது மக்கள் வசிக்கும் பகுதிகளை ராணுவ கட்டுப்பாட்டில் இருந்து பிரித்து, மாநில அரசு வசம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்தது.
அதன் முதல் படியாக, 13 கன்டோன்மென்ட்களை பிரிக்கும் பணிகள் துவங்கியுள்ளன. இந்த பகுதியில் உள்ள நிலங்கள் மற்றும் இதர சொத்துகள், உள்ளாட்சிகள் வசம் ஒப்படைக்கப்படும். அங்கு வாழும் பொது மக்களிடம் இருந்து, உள்ளாட்சி இனி வரி வசூலிக்கும்.