புரி கோவில் பொக்கிஷ அறை பொருட்கள் இடமாற்றம்
புரி கோவில் பொக்கிஷ அறை பொருட்கள் இடமாற்றம்
புரி கோவில் பொக்கிஷ அறை பொருட்கள் இடமாற்றம்
ADDED : ஜூலை 18, 2024 10:58 PM

புரி : புரி ஜெகன்னாதர் கோவிலின் பொக்கிஷ அறையின் உட்புற அறை திறக்கப்பட்டு, அதில் இருந்த விலையுயர்ந்த பொருட்களை இடமாற்றம் செய்யும் பணி நடந்தது.
ஒடிசாவின் புரி ஜெகன்னாதர் கோவிலின் பொக்கிஷ அறையில் உள்ள விலையுயர்ந்த பொருட்களை கணக்கிடும் மற்றும் அறைகளை புனரமைக்கும் பணி துவங்கியுள்ளது. இதன்படி, 46 ஆண்டுகளுக்குப் பின், கோவிலின் பொக்கிஷ அறை கடந்த 14ம் தேதி திறக்கப்பட்டது.
கோவிலின் அடிப்பகுதியில் உள்ள இந்த பொக்கிஷ அறை இரண்டு பிரிவுகளை கொண்டது. கடந்த 14ம் தேதி, வெளிப்புற அறை திறக்கப்பட்டது.
அதில் இருந்த விலையுயர்ந்த பொருட்கள் பாதுகாப்பு பெட்டிகளில் வைக்கப்பட்டு, தற்காலிக பாதுகாப்பு அறைகளுக்கு மாற்றப்பட்டன.
இதைத் தொடர்ந்து, உட்புற அறையை திறக்கும் பணி நடந்தது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவின் தலைவரான ஒடிசா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிஸ்வநாத் ரத் உள்ளிட்டோர் நேற்று கோவிலுக்கு வந்தனர். கோவிலில் வழிபட்ட பின், உட்புற அறை திறக்கப்பட்டது. அதில் இருந்த பொருட்கள் பாதுகாப்பு பெட்டிகளில் வைக்கப்பட்டு, பாதுகாப்பு அறைக்கு மாற்றப்பட்டன.
முன்னெச்சரிக்கையாக பாம்பு பிடிப்போர், சிறப்பு அதிரடிப் படையினர், தீயணைப்புத் துறையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.
நீதிமன்ற உத்தரவின்படி நடக்கும் இந்தப் பணிகள் அனைத்தும் வீடியோவாக படம் பிடிக்கப்பட்டது. மேலும், பொக்கிஷ அறைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன.