புனே கார் விபத்து வழக்கில் திருப்பம் : சிறுவனின் தாயும் அதிரடி கைது
புனே கார் விபத்து வழக்கில் திருப்பம் : சிறுவனின் தாயும் அதிரடி கைது
புனே கார் விபத்து வழக்கில் திருப்பம் : சிறுவனின் தாயும் அதிரடி கைது
ADDED : ஜூன் 01, 2024 10:54 PM

புனே : குடி போதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தி, இரண்டு பேர் பலியான சம்பவம் தொடர்பாக, சிறுவனின் தாயும் கைது செய்யப்பட்டார். மருத்துவப் பரிசோதனையின்போது, சிறுவனின் ரத்தத்துக்கு பதிலாக தன் ரத்தத்தை அளித்து மோசடி செய்ததாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மஹாராஷ்டிர மாநிலம் புனேயில் கடந்த மே 19ம் தேதி, 'போர்ஷ்' என்ற விலையுயர்ந்த கார் சாலையில் தாறுமாறாகச் சென்று விபத்தை ஏற்படுத்தியது. இதில், பைக்கில் சென்ற இரண்டு சாப்ட்வேர் இன்ஜினியர்கள் பலியாகினர்.
அதிர்ச்சி
பிரபல ரியல் எஸ்டேட் தொழிலதிபரின், 17 வயது மகன் அந்த காரை ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
மேலும், அவர் அதீத குடி போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபத்து வழக்கில் இருந்து அந்தச் சிறுவனைக் காப்பாற்ற, அவருடைய குடும்பத்தினர் பல முயற்சிகளை செய்தது, போலீசை அதிர்ச்சி அடையச் செய்தது.
தங்கள் வீட்டின் கார் டிரைவரை கடத்திச் சென்று, காரை அவர் தான் ஓட்டியதாக ஒப்புக் கொள்ளும்படி அந்தச் சிறுவனின் தந்தை மற்றும் தாத்தா முயன்றது, விசாரணையில் தெரிய வந்தது. அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், அந்தச் சிறுவன் குடி போதையில் இருந்ததை உறுதிப்படுத்த, அங்குள்ள மருத்துவமனையில் ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டது.
ஆனால், அந்த சிறுவனின் ரத்தத்துக்கு பதிலாக பெண் ஒருவரின் ரத்த மாதிரி கொடுக்கப்பட்டது, விசாரணையில் தெரிய வந்தது.
இது தொடர்பாக, சாசூன் பொது மருத்துவமனையின் தடயவியல் துறை தலைவர் உட்பட மூன்று டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
பணம் வாங்கி, மோசடியாக ரத்த மாதிரியை மாற்றியதாக அவர்கள் மீது குற்றஞ்சாட்டப் பட்டுள்ளது.
போலீசார் நடத்திய தொடர் விசாரணைகளில், சிறுவனின் ரத்தத்துக்கு பதிலாக கொடுக்கப்பட்ட பெண்ணின் ரத்த மாதிரி, சிறுவனின் தாயுடையது என்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, அந்தச் சிறுவனின் தாய் நேற்று காலை கைது செய்யப்பட்டார்.
சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் உள்ள அந்தச் சிறுவனை, அவருடைய தாயின் முன்னிலையில் போலீசார் நேற்று விசாரித்தனர். சிறார் நீதிச் சட்டத்தின்படி, குற்றவாளிகளை அவர்களுடைய பெற்றோர் முன்னிலையில் தான் விசாரிக்க வேண்டும்.
விசாரணை
முன்னதாக, கடந்த மே 19ம் தேதி, அந்த சிறுவனுக்கு சிறார் நீதிமன்ற நீதிபதி ஜாமின் வழங்கினார். மேலும், 300 வார்த்தைகளில், சாலை பாதுகாப்பு தொடர்பான கட்டுரை எழுத நிபந்தனை விதித்தார்.
இந்த சாலை விபத்து, நாடு முழுதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதையடுத்து, சிறார் நீதிமன்ற அமர்வு விசாரித்து, அந்தச் சிறுவனை காவலில் வைக்க உத்தரவிட்டது.
இதற்கிடையே, ஜாமின் வழங்கியதில் விதிமீறல்கள் நடந்துள்ளதா என்பது தொடர்பாக, மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.