வாடகை செலுத்தாமல் 'டிமிக்கி' வங்கி, தபால் அலுவலகத்துக்கு பூட்டு
வாடகை செலுத்தாமல் 'டிமிக்கி' வங்கி, தபால் அலுவலகத்துக்கு பூட்டு
வாடகை செலுத்தாமல் 'டிமிக்கி' வங்கி, தபால் அலுவலகத்துக்கு பூட்டு
ADDED : ஜூலை 07, 2024 03:10 AM

பெங்களூரு: ஆண்டுக்கணக்கில் வாடகைப்பாக்கி வைத்திருந்த வங்கி மற்றும் தபால் அலுவலகத்துக்கு, பெங்களூரு மாநகராட்சி பூட்டுப் போட்டுள்ளது.
இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை:
பெங்களூரின் எம்.ஜி., சாலையில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கட்டடம், மாநகராட்சிக்குச் சொந்தமானது. இந்த கட்டடத்தின் கீழ் தளத்தில், பேங்க் ஆப் பரோடா மற்றும் தபால் அலுவலகங்கள் செயல்படுகின்றன. இந்த இடங்கள், வாடகை அடிப்படையில் அளிக்கப்பட்டுள்ளன.
பேங்க் ஆப் பரோடா, 2011 முதல் பழைய வாடகையை செலுத்தியது; உயர்த்தப்பட்ட வாடகையை செலுத்தவில்லை. அதிலும் 2022 முதல் வாடகையே செலுத்தவில்லை. பெங்களூரு மாநகராட்சி பல முறை நோட்டீஸ் அளித்தும் பொருட்படுத்தவில்லை.
பேங்க் ஆப் பரோடா 17.56 கோடி ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ளது. எனவே வங்கிக்கு பூட்டுப் போடும்படி, கிழக்கு மண்டல கமிஷனர் உத்தரவிட்டிருந்தார். இதன்படி இன்று (நேற்று) காலை 6:45 மணியளவில், போலீஸ் பாதுகாப்புடன் அங்கு சென்ற மாநகராட்சி அதிகாரிகள், வங்கிக்கு பூட்டுப் போட்டனர்.
இதே கட்டடத்தில் செயல்படும் தபால் துறை அலுவலகம், 2006லிருந்து பழைய வாடகையை செலுத்துகிறது. அதிகரிக்கப்பட்ட வாடகை தொகையை செலுத்தவில்லை. இதை செலுத்தும்படி நோட்டீஸ் அனுப்பியும், பதில் அளிக்கவில்லை. எனவே தபால் அலுவலகத்துக்கும், இன்று (நேற்று) காலை பூட்டுப் போடப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.