ஆசிய ஸ்னுாக்கர்: தங்கவயல் மாணவிக்கு வெண்கலம்
ஆசிய ஸ்னுாக்கர்: தங்கவயல் மாணவிக்கு வெண்கலம்
ஆசிய ஸ்னுாக்கர்: தங்கவயல் மாணவிக்கு வெண்கலம்
ADDED : ஜூலை 07, 2024 03:11 AM

ஆசிய நாடுகளுக்கிடையே நடந்த சீனியர் பெண்களுக்கான ஸ்னுாக்கர் போட்டியில் தங்கவயல் மாணவி கீர்த்தனா பாண்டியன் வெண்கலப்பதக்கம் வென்றார்.
தங்கவயல், பெமல் தொழிற்சாலையில் அதிகாரியாக பணியாற்றி வருபவர் பாண்டியன். இவர் பெமல் ஆபிசர்ஸ் குடியிருப்பில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
இவரது மகள் கீர்த்தனா பாண்டியன், ராபர்ட்சன்பேட்டையில் உள்ள மகாவீர் ஜெயின் கல்லுாரியில், 2022ல் பி.காம்., படித்தபோது, சவுதி அரேபியாவில் ஆசிய நாடுகளுக்கு இடையே நடந்த, 21 வயதுக்கு உட்பட்ட ஜூனியர் பெண்களுக்கான 'ஸ்னுாக்கர் விளையாட்டு போட்டி'யில் சாம்பியன் விருதாக தங்கப்பதக்கம் பெற்றார்.
மிகுந்த ஆர்வம்
தற்போது பெங்களூரு ஜெயின் பல்கலை.,யில் எம்.பி.ஏ., படித்து வருகிறார். படிப்பில் மட்டுமின்றி, விளையாட்டிலும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்.
பெங்களூரு வசந்தநகரில் உள்ள மாநில பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னுாக்கர் மையத்தில் சேர்ந்து மும்பையின் யாசின் மெர்ச்சன்ட் என்பவரிடம் ஆறு ஆண்டுகள் பயிற்சி பெற்றார்.
ஜூனியர் பெண்களுக்கான விளையாட்டில் பல்வேறு நாடுகளில் நடந்த போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை வென்ற கீர்த்தனா, சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் ஜூலை 2ம் தேதி முதல் நடந்த ஆசிய நாடுகளுக்கு இடையேயான சீனியர் பெண்களுக்கான ஸ்னுாக்கர் போட்டியில் பங்கேற்றார். இதில், வெண்கல பதக்கத்தை வென்றார்.
வரவேற்பு
இந்த பதக்கத்துடன், நேற்று முன் தினம் காலை, பெங்களூரு வந்தார். நேற்று காலை தங்கவயலுக்கு வந்தார். பெமல் நகரில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பலரும் பாராட்டினர்.
அவர் கூறுகையில், ''முதல் முறையாக சீனியர் பிரிவில் விளையாடினேன். முதல் போட்டியிலேயே வெண்கல பதக்கம் கிடைத்தது. இது மகிழ்ச்சி அளிக்கிறது. இது போன்று மேலும் முயற்சி எடுத்து பதக்கங்கள் வெல்வேன்,'' என்றார்.
வழக்கம் போல மகிழ்ச்சி
என் மகள் செய்த சாதனை, வழக்கம் போலவே மகிழ்ச்சி அளிக்கிறது. இன்னும் பெரிய அளவில் சாதனை படைக்க வேண்டும். அவரின் ஆர்வத்துக்கு மேலும் உற்சாகம் தருவேன். இந்த பரிசு தேசிய பெருமையை அளித்துள்ளது.
-பாண்டியன்,
கீர்த்தனாவின் தந்தை
வெற்றி வீராங்கனைகள்
ரியாத்தில் நடந்த சீனியர் ஸ்னுாக்கர் விளையாட்டு போட்டியில், முதல் பரிசான தங்கத்தை, சென்னையைச் சேர்ந்த அனுபமா ராமசந்திரன்; இரண்டாம் பரிசான வெள்ளியை தாய்லாந்தின் மஞ்சியா பெற்றனர்.
- நமது நிருபர் -