'குற்றத்துக்கு முகாந்திரம் இல்லை' சோரனுக்கு கிடைத்தது ஜாமின்
'குற்றத்துக்கு முகாந்திரம் இல்லை' சோரனுக்கு கிடைத்தது ஜாமின்
'குற்றத்துக்கு முகாந்திரம் இல்லை' சோரனுக்கு கிடைத்தது ஜாமின்
ADDED : ஜூன் 28, 2024 11:35 PM

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியின், பார்கெயின் ஆஞ்சல் என்ற இடத்தில், ராஜ்குமார் பஹான் என்பவருக்கு சொந்தமான 8.86 ஏக்கர் நிலத்தை, அம்மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் சட்டவிரோதமாக ஆக்கிரமித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
வழக்குப்பதிவு
இந்த முறைகேட்டில் நடந்த பணப்பரிமாற்ற மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இது தொடர்பாக விசாரணை நடத்த ஹேமந்த் சோரனுக்கு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டது.
கடந்த ஜன., 31ல் ஹேமந்த் சோரன் வீட்டில் வைத்து அவரிடம் விசாரணை நடத்திய அமலாக்கத் துறையினர், அன்றிரவே அவரை கைது செய்தனர். அதற்கு முன்ன தாக அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதை தொடர்ந்து, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்த சம்பாய் சோரன் முதல்வராக பதவி ஏற்றார். இந்த வழக்கில் ஜாமின் கோரி, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணையின் போது, சோரன் மீது அமலாக்கத்துறை பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் அவர் மீது வழக்கு ஜோடிக்கப்பட்டு உள்ளதாகவும், சோரன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் மீனாட்சி அரோரா வாதிட்டனர்.
நில அபகரிப்பில் சோரனுக்கு நேரடி தொடர்பு இருப்பதை சாட்சிகள் உறுதி செய்துள்ளதாகவும், அவர் முதல்வர் பதவியை துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் அமலாக்கத்துறை தரப்பில் வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட உயர் நீதிமன்றம், கடந்த 13ம் தேதி தீர்ப்பை ஒத்திவைத்தது.
இந்நிலையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், 50,000 ரூபாய் பிணையில் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின் அளித்து நீதிபதி உத்தரவிட்டார். 'மனுதாரர் குற்றம் செய்யவில்லை என நம்புவதற்கு போதிய காரணங்கள் உள்ளன.
ஆதாரம்
'அவர் குற்றம் செய்தார் என்பதற்கான முகாந்திரம் எதுவும் இல்லை. மேலும், அவர் ஜாமினில் இருக்கும் போது இது போன்ற குற்றத்தில் ஈடுபட வாய்ப்பில்லை.
'சம்பந்தப்பட்ட நிலம் கையகப்படுத்தப்பட்டதில், மனுதாரரின் நேரடி தலையீடு எதுவும் இருந்ததற்கான ஆதாரம் எதுவும் வருவாய் பதிவேடுகளில் இல்லை' என்றும், நீதிபதி தன் உத்தரவில் குறிப்பிட்டார்.
இதையடுத்து, ஐந்து மாத சிறைவாசத்துக்கு பின், ஹேமந்த் சோரன் ஜாமினில் வெளியில் வந்தார்.