Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ தேர்வுக்கு முந்தைய நாள் வினாத்தாள் கிடைத்தது 'நீட்' முறைகேட்டில் கைதானவர்கள் வாக்குமூலம்

தேர்வுக்கு முந்தைய நாள் வினாத்தாள் கிடைத்தது 'நீட்' முறைகேட்டில் கைதானவர்கள் வாக்குமூலம்

தேர்வுக்கு முந்தைய நாள் வினாத்தாள் கிடைத்தது 'நீட்' முறைகேட்டில் கைதானவர்கள் வாக்குமூலம்

தேர்வுக்கு முந்தைய நாள் வினாத்தாள் கிடைத்தது 'நீட்' முறைகேட்டில் கைதானவர்கள் வாக்குமூலம்

ADDED : ஜூன் 21, 2024 01:39 AM


Google News
Latest Tamil News
பாட்னா, 'நீட்' வினாத்தாள் வெளியான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நான்கு பேர், தேர்வுக்கு முந்தைய நாள் இரவு வினாத்தாள் தங்களுக்கு கிடைத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மாதம் 5ல் நடந்தது. முடிவு சமீபத்தில் வெளியானது. ஒரு லட்சம் இடங்களுக்கு, 24 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.

மறுதேர்வு


தேர்வுக்கு முன்னதாக வினாத்தாள் வெளியானதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், ஒரு குறிப்பிட்ட மையத்தில் தேர்வில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, 1,500 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது.

உச்ச நீதிமன்ற தலையீட்டுக்கு பின் கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்டு, அவர்களுக்கு மட்டும் மறுதேர்வுக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த விவகாரம் நாடு முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், நீட் வினாத்தாள் வெளியானது தொடர்பான வழக்கில், பீஹாரைச் சேர்ந்த நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதில், அனுராக் யாதவ், 22, என்பவர் தேர்வு எழுதிய மாணவர். அவருக்கு வினாத்தாள் கிடைக்கச் செய்த அவரது உறவினரும், தனபுர் முனிசிபல் கவுன்சில் இளநிலை பொறியாளருமான சிக்கந்தர் குமார், அவருக்கு வினாத்தாள் அளித்த நிதீஷ் குமார், அமித் ஆனந்த் ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது, பல திடுக்கிடும் சம்பவங்கள் வெளி வந்துள்ளன.

மாணவர் அனுராக் யாதவ் விசாரணையில் கூறியதாவது:

நீட் தேர்வுக்காக ராஜஸ்தானின் கோட்டாவில் உள்ள மையத்தில் பயிற்சி பெற்று வந்தேன். தேர்வுக்கு முன்னதாகவே வினாத்தாள் கிடைக்க ஏற்பாடு செய்வதாக கூறிய என் மாமா சிக்கந்தர், என்னை உடனடியாக கிளம்பி பீஹார் வரும்படி அழைத்தார்.

தேர்வுக்கு முந்தைய நாளான மே 4ம் தேதி இரவு, வினாத்தாளை அளித்தார். அதில் இருந்த கேள்விகளுக்கான பதிலை இரவு முழுதும் மனப்பாடம் செய்தேன். அதே கேள்விகள் தான் தேர்விலும் இடம்பெற்று இருந்தன. தேர்வு முடிந்து வந்த பின், போலீசார் என்னை கைது செய்தனர். அவர்களிடம் உண்மைகள் அனைத்தையும் ஒப்புக் கொண்டேன்.

இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.

பேராசை


வினாத்தாள் கிடைக்க உதவிய சிக்கந்தர், விசாரணையில் கூறியதாவது:

எந்த போட்டித் தேர்வுக்கும் வினாத்தாளை முன்கூட்டியே பெற்றுத்தர முடியும் என, நிதீஷ் குமார் மற்றும் அமித் ஆனந்த் என்னிடம் தெரிவித்தனர்; ஒரு நபருக்கு 30 - 32 லட்சம் ரூபாய் செலவாகும் என தெரிவித்தனர்.

என்னிடம் நான்கு மாணவர்கள் உள்ளதாகவும், அவர்களுக்கு வினாத்தாள் தந்து உதவும்படியும் தெரிவித்தேன்.

பேராசையால் அவர்களிடம் ஆளுக்கு 40 லட்சம் ரூபாய் பெற்று, தேர்வுக்கு முந்தைய நாள் இரவு அவர்களை அழைத்து சென்று வினாத்தாள் பெற்று தந்தேன்.

அதற்கு அடுத்த நாள் போலீஸ் வாகன சோதனையின் போது, அந்த மாணவர்களின் தேர்வு அனுமதி அட்டைகள் என்னிடம் இருந்ததை கண்டு, போலீசார் சந்தேகத்தின்படி பிடித்து விசாரித்தனர். உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே, நீட் முறைகேட்டில், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும், பீஹார் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவின் தனி செயலருக்கு தொடர்பு இருப்பதாக, பா.ஜ.,வைச் சேர்ந்த பீஹார் துணை முதல்வர் விஜய் சின்ஹா குற்றம்சாட்டி உள்ளார்.

தேஜஸ்வியின் தனி செயலருக்கு தொடர்பு?

நீட் முறைகேட்டில், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும், பீஹார் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவின் தனி செயலருக்கு தொடர்பு இருப்பதாக, பா.ஜ.,வைச் சேர்ந்த பீஹார் துணை முதல்வர் விஜய் சின்ஹா குற்றஞ்சாட்டி உள்ளார்.அவர் கூறியதாவது:பாட்னாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் விருந்தினர் மாளிகைக்கு, தேஜஸ்வியின் தனி செயலர் பிரீத்தம் குமார் மே 1ல் தொடர்பு கொண்டு, விருந்தினர் மாளிகையின் ஊழியர் பிரதீப் குமாரிடம் பேசியுள்ளார்.அப்போது, சிக்கந்தர் குமார் என்ற பெயரில் அறை முன்பதிவு செய்யும்படி கூறியுள்ளார். மே 4ம் தேதியும் அவர் பெயரில் அறை முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. லாலு பிரசாத் ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோது, அவருக்கு தேவையான உதவிகளை சிக்கந்தர் குமார் செய்து வந்துள்ளார். அந்த தொடர்பின் அடிப்படையில் தான் வினாத்தாள் கிடைக்க தேஜஸ்வி அவருக்கு உதவியுள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.சிக்கந்தர் குமார் பெயரில் அறை முன்பதிவு செய்யும்படி பிரீதம் கூறியதை, விருந்தினர் மாளிகை ஊழியர் உறுதி செய்துள்ளார்.அதேநேரம், தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்துக்கு பாட்னாவில் விருந்தினர் மாளிகை இல்லை என, ஆணையம் தரப்பு மறுத்துள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us