வேகமாக நிரம்பும் துங்கா அணை; கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
வேகமாக நிரம்பும் துங்கா அணை; கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
வேகமாக நிரம்பும் துங்கா அணை; கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
ADDED : ஜூன் 05, 2024 10:09 PM

ஷிவமொகா : மழைக்காலம் தீவிரமடைவதால், துங்கா அணை வேகமாக நிரம்பி வருகிறது. எந்த நேரத்திலும் தண்ணீர் திறந்து விடப்படும். மக்கள் கவனமாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
ஷிவமொகா நகர் அருகே, காஜனுாரு கிராமத்தில் துங்கா அணை உள்ளது. இதில் 22 மதகுகள் உள்ளன. அணை நிரம்பினால் தண்ணீர் திறந்து விடப்படும். பெரும் இரைச்சலுடன் தண்ணீர் பாய்ந்து செல்லும் அழகை காண, ஷிவமொகா மட்டுமின்றி, பல்வேறு நகரங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் வருவர்.
சிக்கமகளூரு, தீர்த்தஹள்ளியில் அதிக மழை பெய்தால், துங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். அணையும் நிரம்பும். தற்போது மழை பெய்வதால், அணை கிடுகிடுவென நிரம்புகிறது.
மழைக்காலத்தில் முதலில் நிரம்பும் சிறிய அணையாகும். எப்போது வேண்டுமானாலும், தண்ணீர் திறந்து விடப்படலாம். எனவே மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை:
கர்நாடகாவின், பல்வேறு மாவட்டங்களில் தென்மேற்கு பருவ மழை ஆர்ப்பரிக்கிறது. மே மாதம் கோடை மழை பெய்ததால், துங்கா ஆற்றில் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.
ஷிவமொகா அருகில் உள்ள காஜனுாரு கிராமத்தில் உள்ள துங்கா அணை நிரம்பும் கட்டத்தை எட்டியுள்ளது.
மாநிலத்தின் மிகவும் சிறிய அணையான துங்கா, முதலில் நிரம்பும் அணை என்ற பிரசித்தி பெற்றதாகும். இது, 588.24 அடி நீர் சேகரிப்பு திறன் கொண்டதாகும். அணை நிரம்ப, இன்னும் 4 அடி மட்டுமே பாக்கியுள்ளது. எந்த நேரத்திலும் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும்.
அணையின் கீழ்ப்பகுதியில், துங்கா ஆற்றங்கரையில் வசிக்கும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். வெள்ளப்பெருக்கு ஏற்படும். எனவே எந்த காரணத்தை கொண்டும், ஆற்றின் அருகில் செல்ல கூடாது.
ஆடு, மாடுகள் போன்ற வளர்ப்பு பிராணிகளை மேய விடக்கூடாது. ஆற்றின் அருகில் தாழ்வான பகுதியில் வசிக்கும் கிராமத்தினர் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.