3 சிசுக்களின் உடல் கண்டுபிடிப்பு போலி டாக்டரின் பண்ணை வீட்டில் அதிரடி சோதனை
3 சிசுக்களின் உடல் கண்டுபிடிப்பு போலி டாக்டரின் பண்ணை வீட்டில் அதிரடி சோதனை
3 சிசுக்களின் உடல் கண்டுபிடிப்பு போலி டாக்டரின் பண்ணை வீட்டில் அதிரடி சோதனை
ADDED : ஜூன் 16, 2024 10:56 PM

பெலகாவி: திருமணத்திற்கு முன்பு கர்ப்பமாகும் பெண்களை, குழந்தை பெற வைத்து, குழந்தையை விற்று பணம் சம்பாதித்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார். பண்ணை வீட்டில் நடத்திய சோதனையில் மூன்று சிசுக்கள் உடல் கண்டெடுக்கப்பட்டது.
பெலகாவி, கிட்டூர்கோடஹள்ளி கிராமத்தில் ஒரு பண்ணை வீட்டில், கிளினிக் செயல்பட்டு வந்தது.
இந்த கிளினிக்கில் சட்டவிரோத சம்பவங்கள் நடப்பதாக, கலெக்டர் நித்தேஷ் பாட்டீலுக்கு தகவல் கிடைத்தது. அந்த பண்ணை வீட்டில் சோதனை நடத்த சுகாதார அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
கடந்த வாரம் சுகாதார அதிகாரிகள், போலீசார் இணைந்து சோதனை நடத்தினர். அந்த வீட்டில் இருந்த போலி டாக்டரான அப்துல் கபார், அவரது உதவியாளர் ரோஹித் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில், திருமணத்திற்கு முன்பு கர்ப்பமாகும் பெண்களிடம் சென்று, 'நீங்கள் கருவை கலைக்க வேண்டாம். ஆறு அல்லது ஏழாவது மாதத்தில் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுத்து நாங்களே பராமரிக்கிறோம். அதன்பின், நாங்கள் பத்திரமாக வளர்க்கிறோம்' என்று கூறியுள்ளனர். இதை நம்பிய பெண்களும் அவ்வாறே செய்தனர்.
முதல் மூன்று மாதம் குழந்தைகளை நல்லபடியாக வளர்த்து, அதன் பின்னர் குழந்தை இல்லாதவர்களுக்கு 50,000 ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை போலி டாக்டர் அப்துல் கபார் விற்றது தெரிந்தது.
இந்நிலையில் பண்ணை வீட்டில் வைத்து சட்டவிரோத கருக்கலைப்பு நடந்ததும் தெரிந்தது. இதையடுத்து நேற்று பண்ணை வீட்டில் சுகாதார அதிகாரிகள், போலீசார் இணைந்து சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது, பண்ணை வீட்டின் முன்பு புதைக்கப்பட்ட, மூன்று சிசுக்களின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
போலி டாக்டரும், அவரது உதவியாளரும் சேர்ந்து பல கரு கலைப்புகள் செய்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பண்ணை வீட்டில் போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் சோதனை நடத்தப்பட்டது. இடம்: பெலகாவி.