தகிக்கும் தலைநகரம்: வெப்ப நோயாளி எண்ணிக்கை அதிகரிப்பு
தகிக்கும் தலைநகரம்: வெப்ப நோயாளி எண்ணிக்கை அதிகரிப்பு
தகிக்கும் தலைநகரம்: வெப்ப நோயாளி எண்ணிக்கை அதிகரிப்பு
ADDED : ஜூன் 19, 2024 01:55 AM

புதுடில்லி:தலைநகர் டில்லியில் நேற்று வெயில் கடுமையாக சுட்டெரித்தது. வெப்பநிலை, 45 டிகிரி செல்ஷியஸை எட்டியது. கடும் வெப்பாலை வீசும் என கணித்துள்ள வானிலை ஆய்வு மையம் டில்லிக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது.
நேற்று காலை 8:30 மணிக்கு காற்றில் ஈரப்பதம் 61 சதவீதமாக பதிவாகி இருந்தது. இன்று முதல் வெப்பம் படிப்படியாக குறையலாம் எனவும் வல்லுனர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அதே நேரத்தில் இன்றும் நாளையும் மஞ்சள் எச்சரிக்கை, வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய இருநாட்களும் பச்சை எச்சரிக்கை அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறினர்.
காற்றின் தரக்குறியீடு நேற்று காலை 9:00 மணிக்கு 178ஆக பதிவாகி இருந்தது. இது மிதமான நிலை என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
வெப்ப நோயாளிகள்
தேசிய தலைநகர் பிராந்தியத்தில் கடும் வெப்ப அலை வீசுவதால், வெப்பநோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மருத்துவமனைகளில் அதிகரித்து வருகிறது.
ஏராளமானோர் வெப்பப் பக்கவாதம் மற்றும் வெப்பச் சோர்வு ஆகியவற்றுக்கு ஆளாகியுள்ளனர். வயது முதிர்ந்தோர் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சவுரப் பரத்வாஜ் கடந்த மாதம், அரசு மருத்துவமனைகளில் வெப்பப் பக்கவாத நோயாளிகளுக்கு தலா இரண்டு படுக்கைகளும், லோக்நாயக் ஜெயபிரகாஷ் அரசு மருத்துவமனையில் 3 படுக்கைகளும் ஒதுக்கப்படும் என கூறியிருந்தார்.
இதுகுறித்து, எல்.என்.ஜெ.பி., மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் டாக்டர் ரிது சக்சேனா கூறியதாவது:
கடும் வெப்பத்தால் பாதிக்கப்பட்டு தினமும் 8 முதல் 10 நோயாளிகள் வரை வருகின்றனர். அதில் சிலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுகின்றனர். நேற்று முன் தினம் இரண்டு நோயாளிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதற்கு முன் இங்கு 4 பேர் தங்கி சிகிச்சை பெற்று வந்தனர்.
வயது முதிர்ந்தோர் அல்லது உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் கரோனரி தமனி நோய் போன்ற பாதிப்பு உள்ளோர் பாபு ஜெகஜீவன் ராம் மருத்துவமனை மற்றும் சத்யவாடி ராஜா ஹரீஷ் சந்திர மருத்துவமனைகளில் இருந்து இங்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். வெப்ப அலை தீவிரமாக இருப்பதால் நோயாளிகள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுடில்லி அருகே ஹரியானா மாநிலம் குருகிராம் சி.கே.பிர்லா மருத்துவமனையில், வெப்ப பக்கவாத நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காவிட்டாலும், வெப்பச் சோர்வு மற்றும் உஷ்ணச் சொறி போன்ற வெப்பம் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கு தினமும் இரண்டு பேர் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். .
சி.கே.பிர்லா மருத்துவமனை இன்டர்னல் மெடிசின் ஆலோசகர் டாக்டர் துஷார் தயல், “நீரிழிவு மற்றும் இதய நோய் போன்ற முந்தைய நோய்களால் பாதிக்கப்பட்ட வயது முதிர்ந்தோர், அதிக உடல் உழைப்பு கொண்ட இளைஞர்கள் வெப்பச் சோர்வுக்கு ஆளாகின்றனர்.
வெப்பச் சோர்வு நோய் தாக்கினால், லேசான காய்ச்சல், அதிக வியர்வை, விரைவான மற்றும் வலுவான இதயத் துடிப்பு, தலைவலி, தலைசுற்றல், தசை பலவீனம் அல்லது தசைப் பிடிப்பு, குமட்டல் மற்றும் வாந்தி மற்றும் சொறி ஆகியவை ஏற்படும். .
வெப்பச் சோர்வு நோயாளிகள் இரண்டு நாட்களி முழுமையாக குணமடையலாம். கடந்த ஒன்றரை மாதங்களாக வெப்பச் சோர்வு நோயாளிகள் எண்ணிக்கை குருகிராமில் அதிகரித்துள்ளன,” என்றார்.
வசந்த் குஞ்ச் போர்டிஸ் மருத்துவமனை கூடுதல் இயக்குநர் டாக்டர் முக்தா தப்டியா கூறியதாவது:
வெப்பத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இங்கு தினமும் 10 பேர் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். மேலும், 3 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுகின்றனர். பலவீனம், கடுமையான நீரிழப்பு, தலைசுற்றல் மற்றும் சுயநினைவு இழப்பு ஆகியவற்றுடன் மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுகின்றனர்.
வெப்பநிலை 40 டிகிரி செல்ஷியஸுக்கு மேல் உயர்ந்தாலே இதுபோன்ற பாதிப்புகளும் அதிகரிக்கும். வயதில், 55 மற்றும் அதற்கு மேற்பட்டோர் மிக எளிதாக வெப்ப நோய்க்கு ஆளாவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
சர் கங்கா ராம் மருத்துவமனை மூத்த டாக்டர் எம்.வாலி கூறியதாவது:
நுரையீரல் பாதிப்பு, இதயக் கோளாறு மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ள முதியோர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவர்களை வெப்பநோய் மிக எளிதாக தாக்கும் என்பதால் கோடை காலத்தில் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. டில்லியில் இந்த ஆண்டு வெப்ப நிலை வழக்கத்துக்கு மாறாக உள்ளது.
அடுத்த ஆண்டு இன்னும் கடுமையாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். மது அருந்துதவே கூடாது. டீ மற்றும் காபி குடிப்பதையும் கோடைக்காலத்தில் தவிர்க்க வேண்டும்.
இளநீர், மோர், தர்பூசணி, பப்பாளி, மாம்பழம், சிட்ரஸ் சத்து மிகுந்த ஆரஞ்சு, எலுமிச்சை பழம் ஆகியவற்றை சாப்பிட வேண்டும். வெள்ளை நிற ஆடை அணிவது மிகவும் நல்லது. காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை வீட்டை விட்டு வெளியேறாமல் இருப்பதும் நல்லது.
இவ்வாறு அவர் கூறினார்.
மருத்துவமனைகளில்...
புதுடில்லி முனிசிபல் கவுன்சில் உறுப்பினர் குல்ஜீத் சிங் சாஹல் கூறியதாவது:
ராம் மனோகர் லோகியா அரசு மருத்துவமனை, லேடி ஹார்டிஞ்ச் மற்றும் கலாவதி சரண் குழந்தைகள் நல மருத்துவமனைகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வஜிராபாத் நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட டில்லி குடிநீர் வாரியம் வழங்கவில்லை.
கோல் மார்க்கெட், பெங்காலி மார்க்கெட், திலக் மார்க், பார்லிமென்ட் ஹவுஸ், உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம், நீதிபதிகள் பங்களாக்கள், ராம் மனோகர் லோகியா அரசு மருத்துவமனை, கலாவதி மற்றும் லேடி ஹார்டிஞ்ச் குழந்தைகள் நல மருத்துவமனைகளில் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடுகிறது.
நிலைமை இப்படியே நீடித்தால் விரைவில் எய்ம்ஸ் மற்றும் சப்தர்ஜங் மருத்துவமனைகளும் பாதிக்கப்படலாம்.
சந்திரவால் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து ஜனாதிபதி மாளிகை, துாதரகங்கள், பிரதமர் பங்களா, எம்.பி.,க்கள் குடியிருப்பு ஆகியவற்றுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால், இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் கொள்ளளவு, 30 சதவீதம் குறைந்துள்ளது.
சோனியா விஹார் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து ஜோர் பாக், பாரதி நகர், பண்டார சாலை, கான் மார்க்கெட், கக்கா நகர், பாபா நகர் பகுதிகளுக்கு தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. அந்தப் பகுதிகளில் முனிசிபல் கவுன்சில் டேங்கர் லாரி வாயிலாக தண்ணீர் சப்ளை தடையின்றி நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுடில்லி முனிசிபல் கவுன்சில் துணைத் தலைவர் சதீஷ் உபாத்யாய் கூறியதாவது:
முனிசிபல் கவுன்சிலில் 10 தண்ணீர் டேங்கர்கள் உள்ளன. ஒவ்வொரு டேங்கரும் தலா 9000 லிட்டர் கொள்ளளவு கொண்டவை.
சஞ்சய் கேம்ப் மற்றும் விவேகானந்த் கேம்ப் பகுதிகளில் வசிப்போருக்கு தலா 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.