ADDED : ஜூன் 02, 2024 09:37 PM
வீடு கட்டும் திட்டம் வருமா?
ஆஷ்ரியா திட்டத்தில் பல கோடி செலவழித்து மா.குப்பம் ராஜர்ஸ்கேம்ப் பக்கத்தில் 300 வீடுகளை கட்டினாங்க. அந்த வீடுகளை பயனாளிகளுக்கு கொடுத்திருந்தா பல குடும்பங்கள் வாழ்ந்திருக்கும்.
கேட்பாரற்று கிடந்ததால், ரவுடிகளின் இருப்பிடமாக மாறியது. சட்டவிரோத செயல்கள் சகஜம். குட்டிச் சுவராக மாறியதால் இடித்து தரைமட்டமாக்கப் பட்டது. அந்த இடம் காலியாகவே கிடக்குது. அந்த இடத்தில, சகல வசதியோடு, குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடுகள் ஏற்படுத்துவதாக தெரிவிச்சாங்க.
இதுக்காக வீடில்லாதவர்களிடம் முனிசி.,யில் விண்ணப்பங்களை வாங்கி மூட்டை கட்டினாங்களே, அது என்னானதோ. யாருக்கு எப்போது வீடு கிடைக்க போகுதோ. குடிசை மாற்று வாரியம், கோல்டு சிட்டி மீது பார்வை செலுத்துமா.
செல்வாக்கு குவியும் நேரம்!
நாடு சுதந்திரம் அடைவதற்கு முன், மாநிலத்தின் இரண்டாவது தொழில் நகரமாக இருந்தது. தற்போது தொழிலே இல்லாமல், வேலை தேடி வெளியேறும் இடமாக மாறியிருக்கிற வேளையில், புதுசு புதுசா பல பேக்டரிகள் வரப்போகுதாம். மீண்டும் வெளிநாட்டினர் பார்வையும் கோல்ட் சிட்டி மீது விழப்போகுதாம். பாதுகாப்புக்கு ஏற்றபடி காக்கி பயிற்சியாளர்கள் வரப்போறாங்களாம். இதனால் வர்த்தக வளர்ச்சியும் ஏற்படும் என நம்புறாங்க.
பயிற்சியாளர்களுக்கென தங்கும் வசதிக்காக பல கோடி ஒதுக்கப் போறாங்களாம். கோல்டு சிட்டியில் பயிற்சி மையம் அமைக்க, எல்லா விதமான வசதி வாய்ப்புகளும் இருப்பதை அரசிடம் தெரிவிக்கப்போறாங்க. இன்னும் அதற்கான இடத்தை தான் தீர்மானிக்கலயாம்.
எப்படியோ நகரத்துக்கு அதிர்ஷ்டம் கிடைக்க போகுது. அதோட மக்கள் தலைவர்கள், இனி தரையில் நடக்க போவதில்லையாம். வானில் தான் பறப்பாங்களாம். செல்வாக்கு தானா வந்து குவிய போகுதாம்.
சகவாசம் தேவையா?
ஒரு ஆபீசர் வீட்டு இறுதி சடங்கு நிகழ்வுக்கு கோல்டு மைன்சின் உருட்டல், சுருட்டல், மிரட்டல்காரர்கள் ஆஜரானதாக தெரிய வந்திருக்கு. மைன்ஸ் இயங்கும் போது இருந்த சொத்து மதிப்பு எவ்வளவு. இப்போதுள்ள சொத்து மதிப்பு எவ்வளவு என்பதை ஒருதரம் 'ஆடிட்' செய்தால் போதும். பயிரை வேலிகளே மேய்வதாக பேச்சு ஒரு பக்கம் இருக்குது. சிலரின் சகவாசம், ஆபீசருக்கு தேவைதானா என கேள்வி எழுந்திருக்குது.
'உள்குத்து' ரகசியம் என்ன?
கோலார் லோக்சபா தொகுதியின் கிராமப்பகுதி ஓட்டுகள், அயோத்திக்கு ஆதரவாக நிறைய போயிருக்காம். அத்தோட, கைக்கார அசெம்பிளிகாரர் உள் குத்து வேலையை செஞ்சாங்க என்ற தகவல் கசிந்திருக்கு.
கிராமப்பகுதியில, மந்திரி ஒருத்தரு புல்லுக்கட்டுக்கு ஆதரவாக மறைமுக வேலையை செய்தார் என்பதும் தெரிய வந்திருக்குது. ஏன்னா, செங்கோட்டைக்கு கைகாரர் தேர்வாகி விட்டால், தனக்கு செல்வாக்கு சிதைந்து போய்விடும் என்பதால், மட்டம் தட்டவே, சைலன்ட் மோடாக இருந்தாங்களாம்.
ஒரே ஒரு முறை கூட 'இண்டியா' கூட்டணிக்காரர்களை, இவர்கள் அழைத்து பேசவே இல்லையாம். இருந்தாலும், பேச தெரிந்த பலே கட்சியினர், கணிசமான தொகையை தேர்தல் செலவுக்கு கைக் கார அசெம்பிளிகாரரிடம் கறந்துட்டாங்களாம்.