தெலுங்கு பத்திரிகை ஜாம்பவான் ராமோஜி ராவ் காலமானார்
தெலுங்கு பத்திரிகை ஜாம்பவான் ராமோஜி ராவ் காலமானார்
தெலுங்கு பத்திரிகை ஜாம்பவான் ராமோஜி ராவ் காலமானார்
ADDED : ஜூன் 09, 2024 12:04 AM

ஹைதராபாத்: தெலுங்கு பத்திரிகை உலகின் முன்னோடியும், ராமோஜி குழும தலைவருமான ராமோஜி ராவ், 88, உடல்நலக் குறைவால் நேற்று ஹைதராபாதில் காலமானார்.
ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் பிறந்தவர் ராமோஜி ராவ். ஈநாடு என்ற பத்திரிகையை துவங்கி தெலுங்கு பத்திரிகை உலகிற்குள் நுழைந்த இவர், ஈடிவி, ராமோஜி ராவ் பிலிம் சிட்டி, உஷாகிரண் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் என ராமோஜி ராவ் குழுமத்தை விரிவுபடுத்தினார்.
பத்திரிகை, இலக்கியம் மற்றும் கல்வித் துறையில் இவரது பங்களிப்பை பாராட்டும் வகையில், மத்திய அரசு இவருக்கு 2016ல் இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷணை வழங்கியது. இதுதவிர திரைத்துறையில் ஆற்றிய பணிகளுக்காக இவர் நந்தி விருதும் பெற்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் மூச்சுத்திணறல் காரணமாக ஹைதராபாதில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் உயிரிழந்தார்.
ராமோஜி ராவ் மறைவுக்கு தலைவர்கள் மற்றும் திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்ட அறிக்கையில், 'ராமோஜி ராவ் மறைவால் இந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறை தலைசிறந்த நபரை இழந்துவிட்டது' என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் குறிப்பில், 'இந்திய ஊடகத் துறையில் புரட்சியை ஏற்படுத்திய தொலைநோக்கு பார்வையாளர் ராமோஜி ராவ், பத்திரிகை மற்றும் பொழுதுபோக்கு உலகில் அழியாத முத்திரையை விட்டுச் சென்றுள்ளார்' என்று கூறினார்.
'ராமோஜி ராவின் மறைவு, தெலுங்கு பத்திரிகை துறைக்கு மிகப்பெரும் இழப்பு' என்று தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார்.
தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கூறுகையில், 'ராமோஜி ராவ் ஆந்திர மக்களின் வாழ்க்கையில் அழியாத தாக்கத்தை ஏற்படுத்தியவர். அவரது மறைவு நாட்டிற்கே இழப்பு' என்று கூறினார்.
மேலும், தமிழக கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோரும் மறைந்த ராமோஜி ராவ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.