ஆஸ்துமாவுக்கு அதிசய மருந்தாம்: கர்நாடக கிராமத்தில் குவிந்த மக்கள்
ஆஸ்துமாவுக்கு அதிசய மருந்தாம்: கர்நாடக கிராமத்தில் குவிந்த மக்கள்
ஆஸ்துமாவுக்கு அதிசய மருந்தாம்: கர்நாடக கிராமத்தில் குவிந்த மக்கள்
ADDED : ஜூன் 09, 2024 12:01 AM

கோப்பல்: கர்நாடக மாநிலம் கோப்பல் மாவட்டத்தில் உள்ள குடகனஹள்ளி கிராமத்தில், ஆஸ்துமா உள்ளிட்ட மூச்சுத்திணறல் நோய்களுக்கு மருந்து வாங்குவதற்கு ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடக மாநிலம் கோப்பல் மாவட்டத்தில் உள்ள குடகனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த அசோக்ராவ் குல்கர்னி என்ற பாரம்பரிய மருத்துவர் வழங்கும் மருந்து, ஆஸ்துமா உள்ளிட்ட மூச்சுத்திணறல் நோய்களை குணமாக்குவதாக நம்பப்படுகிறது.
ஆண்டுக்கு ஒருமுறை, இலவசமாக அவர் வழங்கும் இந்த மருந்தை வாங்குவதற்காக, நேற்று அந்த கிராமத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.
இதுகுறித்து அசோக்ராவ் குல்கர்னி கூறியுள்ளதாவது:
கடந்த, 100 ஆண்டுகளாக என்னுடைய குடும்பத்தினர், இந்த மருந்தை தயாரித்து வழங்கி வருகின்றனர். என்னுடைய தந்தை, 60 ஆண்டுகளாக இந்த மருந்தை தயாரித்து அளித்துள்ளார். தற்போது, 4-0 ஆண்டுகளாக நான் இந்த சேவையில் ஈடுபட்டுள்ளேன்.
ஹிந்து நாட்காட்டியின்படி, ஜேஷ்ட மாதத்தில், மிருகசீரிட நட்சத்திரத்தில் இருந்து திருவாதிரை நட்சத்திரத்துக்கு மாறும் காலமே, இந்த மருந்து சாப்பிடுவதற்கு மிகவும் சிறந்த காலமாகும்.
அதன்படி நேற்று காலை 7:47 மணிக்கு இந்த நல்ல நேரம் வந்ததால், ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். அவர்கள் அனைவருக்கும் இலவசமாக இந்த அதிசய மருந்தை அளித்தோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கர்நாடகாவின் பல பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலங்கள் உட்பட நாட்டின் பல பகுதி களில் இருந்தும் மக்கள், இந்த மருந்தை வாங்குவதற்காக குவிந்தனர்.
இதையடுத்து, அந்தப் பகுதியில், தற்காலிகமாக அமைக்கப்பட்ட கடைகளில் வியாபாரம் ஜோராக நடந்தது. நுாற்றுக்கணக்கான வாகனங்கள் இந்த கிராமத்தில் குவிந்திருந்தன.
இங்கு வழங்கப்படும் மருந்தின் விபரம் எதுவும் வெளியிடப்படவில்லை. இந்த மருந்து ஆஸ்துமாவை குணப்படுத்துமா என்ற உறுதியான விபரமும் தெரியவில்லை.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதிலும் ஆஸ்துமா நோயை குணப்படுத்துவதற்கான மீன் பிரசாதம் எனப்படும் மீன் மருந்து வழங்கப்பட்டது.