Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ டில்லி விமான நிலையத்தில் இடிந்து விழுந்தது கூரை டாக்சி டிரைவர் பலி; ஆறு பேர் காயம்

டில்லி விமான நிலையத்தில் இடிந்து விழுந்தது கூரை டாக்சி டிரைவர் பலி; ஆறு பேர் காயம்

டில்லி விமான நிலையத்தில் இடிந்து விழுந்தது கூரை டாக்சி டிரைவர் பலி; ஆறு பேர் காயம்

டில்லி விமான நிலையத்தில் இடிந்து விழுந்தது கூரை டாக்சி டிரைவர் பலி; ஆறு பேர் காயம்

ADDED : ஜூன் 29, 2024 12:33 AM


Google News
Latest Tamil News
புதுடில்லி: டில்லியில் நேற்று அதிகாலை பெய்த பலத்த மழை காரணமாக, அங்குள்ள விமான நிலையத்தின் முனையம் - 1 பகுதியில், கூரை இடிந்து விழுந்தது. இந்த விபத்தில், டாக்சி டிரைவர் உயிரிழந்தார்; ஆறு பேர் காயமடைந்தனர்.

தலைநகர் டில்லியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், நேற்று அதிகாலை திடீரென பலத்த மழை பெய்தது.

பலத்த மழை


கொட்டி தீர்த்த கனமழையால், டில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் உள்நாட்டு விமான சேவை பகுதியான, முனையம் - 1ல் கூரை இடிந்து விழுந்தது.

மேலும், இதை தாங்கியிருந்த இரும்பு துாண்களும் எந்தவித சத்தமும் இல்லாமல், பிக் அப் மற்றும் டிராப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மீது விழுந்தன.

இந்த விபத்தில், டாக்சி டிரைவர் ஒருவர் உயிரிழந்தார்; ஆறு பேர் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர், காயமடைந்தோரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

இது குறித்து, டில்லி போலீசார் கூறியதாவது:

பலத்த மழையால், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் முனையம் - 1 பகுதிக்கு வெளியே, புறப்படும் கேட் - 1 முதல், கேட் - 2 வரை உள்ள கூரை, அதிகாலை 5:00 மணி அளவில் இடிந்து விழுந்தது. இதில், நான்கு கார்கள் பலத்த சேதமடைந்தன.

இந்த விபத்தில், ரோகிணி பகுதியைச் சேர்ந்த டாக்சி டிரைவர் ரமேஷ் குமார், 45, என்பவர் உயிரிழந்தார்.

மேலும், ஆறு பேர் காயமடைந்தனர். அனைவரது உடல்நிலையும் சீராக இருக்கிறது. சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அமைச்சர் ஆய்வு


இதைத் தொடர்ந்து, விபத்து நடந்த டில்லி விமான நிலையத்தின் முனையம் - 1 பகுதியை, தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த, மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு நேரில் ஆய்வு செய்தார்; மேலும், காயமடைந்தோரை சந்தித்தும் அவர் ஆறுதல் கூறினார்.

அவர் கூறுகையில், ''துவக்க நிலையிலேயே விபத்துக்கான காரணத்தை கூற முடியாது. விசாரணைக்கு பின் தான் கூற முடியும். விமான நிலையத்தில் இடிந்து விழுந்த பகுதி, 2008 - 09ல் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது.

''பலியானவர் குடும்பத்துக்கு இழப்பீடாக, 20 லட்சம் ரூபாய் அளிக்கப்படும். காயமடைந்தோருக்கு தலா 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும்,'' என்றார்.

இது குறித்து டில்லி சர்வதேச விமான நிலைய ஆணைய அதிகாரிகள் கூறுகையில், 'அதிகாலை 5:00 மணிக்கு விபத்து நடந்துஉள்ளது. இரவு முழுதும் பெய்த பலத்த மழை மற்றும் காற்று தான் விபத்துக்கான காரணமாக இருக்கலாம்.

'இது குறித்து விசாரிக்க தொழில்நுட்ப குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு விரைவில் அறிக்கை அளிக்கும்' என்றனர்.

நிறுத்தம்

டில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் முனையம் - 1 பகுதி, உள்நாட்டு விமான சேவைக்கு பயன்படுத்தப்படுகிறது. மேற்கூரை நேற்று இடிந்து விழுந்ததை அடுத்து, முனையம் - 1 பகுதியில், மறு உத்தரவு வரும் வரை விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து, சமூக வலைதளத்தில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்ட பதிவில், 'மறு அறிவிப்பு வரும் வரை, முனையம் - 1 பகுதியில் விமான சேவை நிறுத்தப்படுகிறது. 'விமானங்கள் சுமுகமாக செயல்பட மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன' என, தெரிவிக்கப்பட்டுஉள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us