தாவர கொழுப்பு கலந்த நெய் சப்ளை கருப்பு பட்டியலில் தமிழக நிறுவனம் திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை
தாவர கொழுப்பு கலந்த நெய் சப்ளை கருப்பு பட்டியலில் தமிழக நிறுவனம் திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை
தாவர கொழுப்பு கலந்த நெய் சப்ளை கருப்பு பட்டியலில் தமிழக நிறுவனம் திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை
ADDED : ஜூலை 24, 2024 01:54 AM
திருப்பதி:லட்டு மற்றும் நெய்வேத்திய பிரசாதங்களை தயார் செய்வதற்கு, திருமலை திருப்பதி தேவஸ்தானம், ஒவ்வொரு ஆண்டும் பல நுாறு கோடி ரூபாய்க்கு நெய் கொள்முதல் செய்கிறது. தேவஸ்தானத்திற்கு நெய் சப்ளை செய்ய ஒப்பந்தம் பெற்ற நிறுவனங்கள் தரம், மணம், சுவை ஆகியவற்றுடன் கூடிய நெய்யை மட்டுமே சப்ளை செய்ய வேண்டும் என்பது நிபந்தனை.
கடந்த காலங்களில் நெய் சப்ளை செய்த தனியார் நிறுவனங்கள் தரம், மணம், சுவை ஆகியவற்றில் குறைபாடுள்ள நெய்யை சப்ளை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், திருப்பதி லட்டு பிரசாதங்களில் தரக்குறைவு ஏற்பட்டது.
பல்வேறு புகார்கள் வந்த நிலையில், தரமான நெய்யை கொள்முதல் செய்ய 4 பேர் கொண்ட நிபுணர் குழுவை தேவஸ்தான நிர்வாகம் அமைத்துள்ளது.
இந்நிலையில், தேவஸ்தானத்திற்கு சப்ளை செய்யப்பட்ட நெய்யை ஆய்வுக்கூடத்தில் சோதித்து பார்த்தபோது, தமிழகத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் சப்ளை செய்த நெய்யில் தாவர கொழுப்பு இருப்பதுகண்டுபிடிக்கப்பட்டது. அந்த நிறுவனத்தை தேவஸ்தானம் கருப்பு பட்டியலில் வைத்துள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவ் கூறியதாவது:
இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண சர்வதேச தரத்துடன் கூடிய ஆய்வுக்கூடத்தை திருமலையில் நிறுவ ஏற்பாடு நடந்து வருகிறது. இதனால் திருமலைக்கு வரும் நெய்யை அவ்வப்போது சோதித்து, தரத்தை உறுதி செய்ய முடியும்.
தமிழகத்தை சேர்ந்த பால் பொருள் உற்பத்தி நிறுவனம், நெய்யை தொடர்ந்து சப்ளை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நிறுவனத்தை கருப்பு பட்டியலில் வைத்திருக்கிறோம்.
இதுபோன்ற பிரச்னைகள் எதிர்காலத்தில் ஏற்படாமல் தடுக்க நெய் கொள்முதல் வழிமுறைகளை ஏற்படுத்த, எங்களின் நிபுணர் குழு ஆலோசனைகள் வழங்கும். அதன் அடிப்படையில் இனி நெய் கொள்முதல் நடைபெறும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.