மழை வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை ஆறு கட்டுப்பாட்டு அறைகள் அமைப்பு
மழை வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை ஆறு கட்டுப்பாட்டு அறைகள் அமைப்பு
மழை வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை ஆறு கட்டுப்பாட்டு அறைகள் அமைப்பு
ADDED : ஜூன் 13, 2024 02:18 AM
ஜந்தர் மந்தர்:மழைக்காலத்தை எதிர்கொள்ள டில்லி மாநகராட்சி தயாராகி வருகிறது. மழை வெள்ளத்தின்போது உடனடியாக நடவடிக்கை எடுக்க ஆறு கட்டுப்பாட்டு அறைகளை ஏற்படுத்தியுள்ளது.
நகரில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
மழைக்காலத்தில் வெள்ளம் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், ஆப்பிரிக்கா அவென்யூ, பாபா கரக் சிங் மார்க், பஞ்ச்குயன் சாலை, பூரானா குயிலா சாலை, லோதி எஸ்டேட் ஆகிய ஐந்து இடங்களை மாநகராட்சி கண்டறிந்துள்ளது.
இந்த பகுதிகளைச் சுற்றி சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் வாயிலாக, மாநகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து நாள் முழுவதும் ஹாட்ஸ்பாட்கள் கண்காணிக்கப்படும்.
நகரில் வெள்ளம் பாதித்த பகுதிகளை உடனடியாக சென்றடைவதற்காக சங்கிலி மெஸ், கான் மார்க்கெட், நேதாஜி நகர், மல்சா மார்க், மந்திர் மார்க் மற்றும் கன்னாட் பிளேஸ் ஆகிய இடங்களில் வடிகால் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை உயர் அதிகாரிகளால் நிர்வகிக்கப்பட்டு, நீர்நிலை புகார்கள் குறித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க, 24 மணி நேரமும் செயல்படும்.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து நீரை வெளியேற்ற 99 நிரந்தர பம்புகளும், 62 தற்காலிக பம்புகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
கட்டுப்பாட்டு அறைகள் அமைப்பது மட்டுமின்றி, வடிகால் அமைப்பை தூர்வாருவது குறித்தும் மாநகராட்சி கவனம் செலுத்தி வருகிறது. இந்த பணிகள், வரும் 30க்குள் முடிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.