Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ மறக்கப்படுவதற்கான உரிமை உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது

மறக்கப்படுவதற்கான உரிமை உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது

மறக்கப்படுவதற்கான உரிமை உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது

மறக்கப்படுவதற்கான உரிமை உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது

ADDED : ஜூலை 25, 2024 01:37 AM


Google News
புதுடில்லி குற்ற வழக்கில் ஒருவர் விடுதலை செய்யப்படும் நிலையில், குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு மறக்கப்படுவதற்கான உரிமை உள்ளதா என்பது குறித்து விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் மீது பாலியல் பலாத்காரம் மற்றும் மோசடி வழக்கு பதியப்பட்டது. அவருக்கு சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றம் தண்டனை விதித்தது.

அவர், மதுரையில் உள்ள சென்னை உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு செய்தார். அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் அவரை 2011ல் உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது.

இதற்கிடையே மறுமணம் செய்த அவருக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன. நீதிமன்ற உத்தரவு தொடர்பான செய்தி, 'இந்தியா கானுான்' என்ற சட்டம் தொடர்பான செய்திகளை வெளியிடும் இணையதளத்தில் வெளியானது.

தன் அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் குடும்பம் மற்றும் தனிப்பட்ட விபரங்கள் தீர்ப்பு நகலில் உள்ளன. அவை இணையதளத்தில் வெளியாகியுள்ளன. தன் தனிப்பட்ட மற்றும் கடந்த கால வாழ்க்கையின் விபரங்களை பொது வெளியில் பகிர்வது ஏற்புடையதல்ல.

தனியுரிமையை பாதிக்கிறது. பெயர் மற்றும் பிற அடையாளங்களை நீக்க உத்தரவிடக் கோரி அவர் வழக்கு தொடர்ந்தார்.

இதை, 2021ல் தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து அவர் தொடர்ந்த மேல்முறையீட்டை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை அமர்வு, மறக்கப்படும் உரிமையின் கீழ், அவர் தொடர்பான தனிப்பட்ட தகவல்களை நீக்க, கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து இந்தியா கானுான் இணையதளம் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு கூறியுள்ளதாவது:

ஒரு வழக்கில் தீர்ப்பு அளிக்கும்போது, அது பொது சொத்தாக மாறி விடுகிறது. அது தொடர்பான தகவல்களை இணையதளத்தில் இருந்து நீக்குவதற்கு உத்தரவிடுவது, தீவிர தாக்கத்தை ஏற்படுத்தும்.

குற்ற வழக்கில் விடுவிக்கப்பட்டார் என்பதற்காகவே, அது தொடர்பான செய்திகளை இணையதளத்தில் இருந்து நீக்கும்படி நீதிமன்றம் எப்படி உத்தரவிட முடியும்? இந்த விஷயத்தில் மறக்கப்படும் உரிமை மீறப்படுகிறதா என்பது தொடர்பாக விசாரிக்கப்படும்.

இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.

அரசியலமைப்பு சட்டத்தின் 21வது பிரிவின்படி, தனிமனித சுதந்திரத்துக்கான உரிமை வழங்கப்பட்டுள்ளது. இந்த உரிமையின்படி, ஒருவர் தன் தொடர்பான தகவல்கள் பொதுவெளியில் வெளியிடப்படுவதை நிராகரிக்க முடியும்.

அந்த சட்டப் பிரிவின் ஒரு பகுதியாக, மறக்கப்படுவதற்கான உரிமை உள்ளது. இதன்படி, பொதுவெளியில் தன் தொடர்பான தகவல்களை நீக்குவதை கோருவதற்கு இந்த உரிமை வழங்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us