Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ 'கூகுள் மேப்ஸ்' செயலியால் காட்டில் தவித்த மாணவர்கள்

'கூகுள் மேப்ஸ்' செயலியால் காட்டில் தவித்த மாணவர்கள்

'கூகுள் மேப்ஸ்' செயலியால் காட்டில் தவித்த மாணவர்கள்

'கூகுள் மேப்ஸ்' செயலியால் காட்டில் தவித்த மாணவர்கள்

ADDED : ஜூலை 03, 2024 01:02 AM


Google News
கட்டாக், ஒடிசாவில், 'கூகுள் மேப்ஸ்' செயலியை பயன்படுத்தி கோவிலுக்கு சென்ற மாணவர்கள், வழிதவறி காட்டுக்குச் சென்று, 11 மணி நேரம் சிக்கித் தவித்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

ஒடிசாவின் கட்டாக் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லுாரி ஒன்றில், சுஜித்யா சாஹு, சூர்ய பிரகாஷ் மொகந்தி, சுபன் மொஹபத்ரா, ஹிமான்சு தாஸ், அரக் ஷிதா மொஹபத்ரா ஆகிய ஐந்து மாணவர்கள் படிக்கின்றனர்.

இவர்கள், ஜூன் 30ல் இருசக்கர வாகனங்களில், தேன்கனல் மாவட்டத்தில் உள்ள சப்தசஜ்யா கோவிலுக்கு, காலை 11:00 மணி அளவில் வந்தனர்.

சாமி தரிசனம் செய்து, கோவிலை சுற்றிப் பார்த்த மாணவர்கள், வீடு திரும்பும் போது, கூகுள் மேப்ஸ் செயலியை பயன்படுத்தினர்.

அதில் காட்டிய பாதையை பின்தொடர்ந்து வந்த அவர்கள், பிற்பகல் 2:00 மணி அளவில், அடர்ந்த வனப் பகுதிக்குள் சிக்கி தவித்தனர். இதன் பின், கூகுள் மேப்ஸ் தவறான பாதையை காட்டி விட்டது என்பதை அவர்கள் தெரிந்து கொண்டனர்.

உணவு, நீரின்றி தவித்த மாணவர்கள், மாலை 5:30 மணி அளவில் தடை செய்யப்பட்ட பகுதியான, பூஷுனி கோலாவை அடைந்தனர்.

நம்பிக்கையை இழந்த மாணவர்கள், உதவிக்கு யாரையாவது தொடர்பு கொள்ள முடியுமா என, நாலாபுறமும் தேடினர்.

கடைசியாக போலீசாரை மொபைல் போனில் தொடர்பு கொள்ள முடிந்தது. உடனே, வனத்துறை அதிகாரிகள் உதவியுடன், போலீசார் இரு குழுக்களாக பிரிந்து மாணவர்களை தேடினர். இரவு 12:00 மணி அளவில் ஐந்து மாணவர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

கூகுள் மேப்ஸ் தவறாக வழி காட்டுவது இது முதன்முறையல்ல. சமீபத்தில், கேரளாவில், கூகுள் மேப்ஸ் செயலியை பயன்படுத்தி காரில் சென்ற இருவர், காரை ஆற்றில் விட்ட சம்பவமும் நடந்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us