Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ கனமழையால் ஆறுகளில் வெள்ள பெருக்கு கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம்

கனமழையால் ஆறுகளில் வெள்ள பெருக்கு கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம்

கனமழையால் ஆறுகளில் வெள்ள பெருக்கு கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம்

கனமழையால் ஆறுகளில் வெள்ள பெருக்கு கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம்

ADDED : ஜூலை 15, 2024 06:08 AM


Google News
மங்களூரு, : தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கர்நாடகாவின் பல பகுதிகளில் கன மழை பெய்து வருவதால், ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.

கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, கடலோர மாவட்டங்கள், மலை பிரதேசங்கள், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தினமும் மழை பெய்து வருகிறது.

இடிந்து விழுந்த வீடு


கடலோர மாவட்டங்களில், பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதித்துள்ளது.

உத்தர கன்னடா மாவட்டம், குமட்டாவில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து கொண்டது. கந்தவல்லி கிராமத்தில், சிவு முக்தி என்பவர் வீட்டின் கூரை, சுவர்கள் இடிந்து விழுந்தது. ஏராளமான பொருட்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

மேலும், ஹொன்னாவர், கார்வார், அங்கோலாவில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், மக்கள் வீட்டில் முடங்கி உள்ளனர். அங்கோலாவின் ஹொசதேவதா அருவியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், பொது மக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

படகு மூலம் மீட்பு


கார்வாரின் சண்டியா, கோல் சண்டியா பகுதிகளில் உள்ள தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் உள்ள 5 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. அங்குள்ள மக்களை படகு மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இன்று கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், எட்டு தாலுகாக்களில் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளித்து, கலெக்டர் லட்சுமிபிரியா உத்தரவிட்டுள்ளார்.

குடகு மாவட்டத்தில் மலை பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். ஆங்காங்கே மின் கம்பங்கள் சாய்ந்துள்ளதால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான மக்கள் இருட்டில் காலம் கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளன. சாலைகளில் வெள்ளம் தேங்குவதால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.

காவிரி ஆற்றில் வெள்ளம்


இதனால், காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மடிகேரியில் இருந்து, காலிபீடு கிராமத்துக்கு செல்லும் வழியில் ஆங்காங்கே மரங்கள் சாய்ந்ததால், ஆறு கார்கள் சேதமடைந்துள்ளன.

தகவலறிந்த வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து அப்புறப்படுத்தினர்.

காவிரி பிறப்பிடமான தலைகாவிரி, பாகமண்டலா, நாபோக்லு பகுதிகளில் விடாமல் அதிகபட்ச மழை பெய்து வருகிறது. இது போன்று, மடிகேரி, பெட்டிகேரி, சம்பாஜே, சுண்டிகொப்பா, குஷால்நகர், சோம்வார்பேட்டை உட்பட பல பகுதிகளில் கன மழை பெய்கிறது. கடும் குளிரும் இருப்பதால், மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு தவிர, வெளியே வருவதை தவிர்க்கின்றனர்.

குடகு பொறுத்தவரையில், மழை காலங்களில் நிலச்சரிவு ஏற்படுவது வழக்கம். இம்முறை மிகவும் எச்சரிக்கையாக இருக்கும்படி, மழை அடிவாரங்களில் வசிக்கும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிலச்சரிவு


ஷிவமொகா மாவட்டம், தீர்த்தஹள்ளி அடுத்த ஆகும்பேவில் தொடர் மழையால், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

அவ்வழியாக செல்லும் மக்கள் எச்சரிக்கையுடன் செல்லும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குடகு மாவட்டம், மடிகேரியில் உள்ள ஹாரங்கி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி, உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

மைசூரின் கபினி, மாண்டியாவின் கே.ஆர்.எஸ்., அணைகளில் இருந்தும் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. ஹேமாவதி அணைக்கு நீர் வரத்து அதிகரித்தாலும், எதிர்பார்த்த அளவுக்கு திறக்கப்படவில்லை. காவிரியில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால், மாண்டியாவின் மளவள்ளியில் உள்ள ககனசுக்கி, பரசுக்கி அருவிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்த ரம்மியமான காட்சியை பார்ப்போருக்கு ஆனந்தத்தை தருகிறது.

விடுமுறை அறிவிப்பு


இது போன்று, தட்சிண கன்னடாவின் மங்களூரு, குக்கே சுப்பிரமணியா, பெல்தங்கடி, பன்ட்வால் பகுதியிலும் மழை பெய்து வருவதால், நேத்ராவதி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. கன மழையால், தட்சிண கன்னடா, உடுப்பி மாவட்டங்களுக்கு இன்று பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us