ஒடிசாவின் முதல் முஸ்லிம் பெண் எம்.எல்.ஏ., சோபியா
ஒடிசாவின் முதல் முஸ்லிம் பெண் எம்.எல்.ஏ., சோபியா
ஒடிசாவின் முதல் முஸ்லிம் பெண் எம்.எல்.ஏ., சோபியா
ADDED : ஜூன் 09, 2024 11:59 PM

புவனேஸ்வர்: ஒடிசா சட்டசபை தேர்தல் இந்த முறை பல ஆச்சரியங்களை அளித்தது. அதில் ஒன்றுதான், 32 வயதாகும், ஒடிசாவின் முதல் முஸ்லிம் பெண் எம்.எல். ஏ.,வான சோபியா பிர்துஸ். எதிர்பாராதவிதமாக தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்து, 30 நாட்கள் மட்டுமே பிரசாரம் செய்து வென்றுள்ளார்.
ஒடிசா சட்டசபைக்கு சமீபத்தில் லோக்சபாவுடன் இணைந்து தேர்தல் நடந்தது. இதில், 24 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் தோல்வியை சந்தித்தது. முதல் முறையாக, மாநிலத்தில் பா.ஜ., ஆட்சி அமைக்க உள்ளது.
இந்த தேர்தலில், 14 இடங்களில் காங்கிரஸ் வென்றது. அதில் ஒருவர்தான், சோபியா பிர்துஸ். இவருடைய தந்தை முகமது மோகிம், கட்டாக்கின் எம்.எல்.ஏ.,வாக இருந்தார். கடந்த, 2014 தேர்தலில் தோல்வியடைந்த அவர், 2019ல் வென்றார்.
ஒடிசா ஊரக வீட்டு வசதி வாரிய ஊழலில், இவருடைய மெட்ரோ குழுமம் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனமும் சிக்கியது. அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் மறுத்தது. அதனால், தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்தார்.
இந்தத் தொகுதிக்கு தகுதி வாய்ந்த வேறு வேட்பாளர்கள் கிடைக்காத நிலையில், முகமது மோகிமின் மகளான, 32 வயதாகும் சோபியா பிர்துசை களமிக்க காங்கிரஸ் முடிவு செய்தது. இவரும் ரியஸ் எஸ்டேட் துறையில் ஈடுபட்டுள்ளார். தேர்தலுக்கு ஒரு மாதமே இருந்த நிலையில், வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டார்.
தன் தந்தைக்கு கிடைத்த வரவேற்பு தனக்கு கிடைக்குமா என்ற சந்தேகத்துடன், தீவிர அரசியலில் இதுவரை ஈடுபடாமல் இருந்த சோபியா, தைரியமாக களமிறங்கினார்.
கிடைத்த, 30 நாட்களில், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். மக்களை வீடு வீடாகச் சென்று சந்தித்து ஓட்டு சேகரித்தார்.
இறுதியில், 8,001 ஓட்டுகள் வித்தியாசத்தில், பா.ஜ.,வின் பூர்ண சந்திர மொகபத்ராவை வென்றார். இதன் வாயிலாக, ஒடிசாவின் முதல் முஸ்லிம் பெண் எம்.எல்.ஏ.,வாகிஉள்ளார்.