20 ஆண்டுக்கு பின் வீடு திரும்பிய மகன்
20 ஆண்டுக்கு பின் வீடு திரும்பிய மகன்
20 ஆண்டுக்கு பின் வீடு திரும்பிய மகன்
ADDED : ஜூன் 03, 2024 04:04 AM
தாவணகெரே : கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், வீட்டை விட்டு காணாமல் போன மகன், நேற்று திடீரென வீடு தேடி வந்து, பெற்றோரை ஆச்சரியப்படுத்தினார்.
தாவணகெரேவின் ஜவலகட்டா கிராமத்தை சேர்ந்தவர் திப்பண்ணா. இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இவர்களின் மூத்த மகன் விஜயகுமார், தாவணகெரே அரசு ஐ.ஐ.டி., கல்லுாரியில் 2004ல் படித்து வந்தார். அப்போது அவருக்கு 22 வயது.
கல்லுாரியில் படித்த இவர், திடீரென, வீட்டை விட்டு காணாமல் போனார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. போலீசில் புகார் அளித்தும் பயனில்லை. இவரை தேடுவதை பெற்றோர் நிறுத்தினாலும், மகன் வீடு திரும்ப வேண்டும் என, தினமும் கடவுளிடம் வேண்டினர்.
இந்நிலையில் 20 ஆண்டுக்கு பின், நேற்று காலை, இவர் ஜவலகட்டா கிராமத்தின் அரசு பள்ளிக்கு வந்தார். அப்போது பால்ய நண்பர் ஒருவர், விஜயகுமாரை அடையாளம் கண்டு, வீட்டுக்கு அழைத்து சென்றார். 20 ஆண்டுக்கு பின், மகன் கிடைத்ததால் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இத்தனை ஆண்டுகளாக எங்கிருந்தார் என, கேட்ட போது, 'வீட்டை விட்டு சென்ற நான், கேரளாவில் மாடுகளை பராமரிக்கும் வேலை செய்தேன். அதன்பின் மஹாராஷ்டிராவுக்கு சென்றேன். பணிக்காக ஆவணங்கள் கேட்டனர். அப்போது நான் படித்த பள்ளி, என் நினைவுக்கு வந்தது. சான்றிதழ் பெற வந்தேன்' என்றார்.
ஆனால் இவர் வீட்டை விட்டு வெளியேறியது ஏன்; இத்தனை ஆண்டுகளாக எங்கிருந்தார்; என்ன செய்தார்; படிப்பை பாதியில் நிறுத்தியது ஏன் என்பது, மர்மமாக உள்ளது. இது பற்றி கேட்காமல், மகன் கிடைத்த மகிழ்ச்சியில் பெற்றோர் உள்ளனர்.