சுகப்பிரசவம் பார்த்து மருத்துவச்சியான சிவலிங்கம்மா
சுகப்பிரசவம் பார்த்து மருத்துவச்சியான சிவலிங்கம்மா
சுகப்பிரசவம் பார்த்து மருத்துவச்சியான சிவலிங்கம்மா
ADDED : ஜூன் 16, 2024 07:21 AM

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, பெண்கள் சுகப்பிரசவத்தில் குழந்தை பெற்றுக் கொள்ளவே விரும்பினர். இன்றைய காலகட்டத்தில், சுகப்பிரசவம் குறைந்துள்ளது. 'சுகப்பிரசவத்தில் குழந்தை பெற்றுக்கொள்ளும் வலியை விட, அறுவை சிகிச்சை செய்து குழந்தை பெற்றுக் கொள்கிறோம்' என, பெண்கள் எளிதில் சொல்லி விடுகின்றனர்.
அறுவை சிகிச்சை செய்து குழந்தை பெற்றால் தான், வாழ்நாள் முழுவதும் வலி இருக்கும் என்று அவர்கள் நினைப்பதில்லை.
சுகப்பிரசவம்
மருத்துவமனைகளிலும், அறுவை சிகிச்சை செய்து, பெரும்பாலும் குழந்தைகளை வெளியே எடுக்கின்றனர். இந்த காலகட்டத்திலும் பெண்களுக்கு பிரசவம் பார்த்து, சுகப்பிரசவத்தில் குழந்தை பெற வைக்கிறார் ஒரு மூதாட்டி.
ராம்நகர் கனகபுராவின் கூடகனஹல்லி கிராமத்தில் வசிப்பவர் சிவலிங்கம்மா, 67. கடந்த 30 ஆண்டுகளாக கிராமத்துப் பெண்களுக்கு சுகப்பிரசவம் பார்க்கிறார். இதனால் அவரை கிராம மக்கள் 'கிராமத்து மருத்துவச்சி' என அன்பாக அழைக்கின்றனர். இதுவரை 50 பிரசவத்தை வெற்றிகரமாக பார்த்துள்ளார்.
இதுகுறித்து சிவலிங்கம்மா பெருமையுடன் கூறியதாவது:
சுகப்பிரசவத்தில் குழந்தை பெற்றுக் கொள்வதே, எப்போதும் பெண்களுக்கு ஆரோக்கியம். ஆனால் இப்போது அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது சர்வ சாதாரணமாகிவிட்டது.
வாழ்நாள் முழுதும் வலி
சுகப்பிரசவத்தில் குழந்தை பெற்றால் ஒரு சில நாட்கள் மட்டும் வலி இருக்கும். ஆனால் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும்போது, வாழ்நாள் முழுவதும் வலியை அனுபவித்து ஆக வேண்டும்.
குறிப்பிட்ட தேதியில் குழந்தையை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று, இந்த காலத்து பெண்கள் ஆசைப்படுகின்றனர்.
இதனால் அறுவை சிகிச்சை செய்யும்படி டாக்டர்களை அவர்களே வற்புறுத்துகின்றனர். நான், கடந்த 30 ஆண்டுகளில் 50 பெண்களுக்கு வெற்றிகரமாக சுகப்பிரசவத்தில் குழந்தை பெற வைத்துள்ளேன்.
என்னிடம் ஆலோசனை கேட்கும் பெண்கள், என்னை அன்பாக 'அம்மா' என்று பாசமாக அழைப்பர்.
சுகப்பிரசவத்தில் குழந்தை பிறக்க, நான் கூறும் வழிமுறைகளை கடைப்பிடிப்பர்.
அவர்களுக்கு பிரசவ வலி வந்ததும் உடனடியாக அங்கு சென்று பிரசவம் பார்ப்பேன். குழந்தையின் முதல் அழுகையை கேட்பது அவ்வளவு சந்தோஷமாக இருக்கும்.
எனது வாழ்நாளில் கடைசி வரை, பெண்களுக்கு பிரசவம் பார்ப்பேன். இதை கடவுள் எனக்கு கொடுத்த ஒரு வரமாக கருதுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.-- நமது நிருபர் -