உப்பு + சர்க்கரை + ஏலக்காய் சுவையான லஸ்சி
உப்பு + சர்க்கரை + ஏலக்காய் சுவையான லஸ்சி
உப்பு + சர்க்கரை + ஏலக்காய் சுவையான லஸ்சி
ADDED : ஜூன் 16, 2024 07:22 AM

விவசாயம், லாபகரமான தொழில் இல்லை என, பலரும் முகத்தை சுழிக்கின்றனர். முயற்சியும், புத்திசாலி தனமும் இருந்தால், விவசாயம் சார்ந்த துணை தொழிலை செய்து, லட்சாதிபதியாகலாம் என்பதை, விவசாயி ஒருவர் சாதித்து காண்பித்துள்ளார்.
விவசாயம் நாட்டின் முதுகெலும்பு என்பது, அனைவரும் அறிந்ததே. ஆனால் விவசாயம் என்றாலே, முகத்தை சுழிப்பவர்களே அதிகம். விவசாயிகள் திருமணம் செய்து கொள்ள பெண் கொடுக்கவும் முன்வருவதில்லை. இவர்களை மணக்க பெண்களும் முன் வருவதில்லை. விவசாயிகள் திருமண வயதை கடந்துள்ளனர்.
குறைவான விளைச்சல்
திருமணம் ஆகவில்லை என்ற ஏக்கத்தில், விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட உதாரணங்களும் உள்ளன. மற்ற தொழில்களை போன்று, விவசாயம் லாபகரமான தொழில் இல்லை.
கடன் வாங்கி பயிரிட்டாலும், பல்வேறு காரணங்களால் எதிர்பார்த்த விளைச்சல் கிடைப்பது இல்லை. அதிக மகசூல் கிடைத்தாலும், நியாயமான விலை கிடைப்பது இல்லை. போட்ட முதலீடும் திரும்ப வருவது இல்லை.
இதே காரணத்தால், பலரும் விவசாயத்துக்கு முழுக்கு போட்டு, பிழைப்பு தேடி நகரங்களுக்கு புலம் பெயர்கின்றனர்.
பால் வியாபாரம்
இவர்களுக்கு இடையே, விவசாயம் சார்ந்த தொழிலை செய்து, வெற்றிகரமாக வாழ்க்கை அமைத்து கொண்ட சில விவசாயிகளும் உள்ளனர். அவர்களில் ஒருவர் முரகப்பா பசப்பா அம்பி.
பெலகாவி, அதானியின் நதி இங்களகாவ் கிராமத்தில் வசிப்பவர் விவசாயி முரகப்பா பசப்பா அம்பி. விவசாயத்தை மட்டுமே நம்பியிராத இவர், பால் உற்பத்தியில் ஈடுபட்டார். இவரது தந்தை பசப்பா அம்பி, பால் வியாபாரம் செய்தார். இதை மகனும் தொடர்ந்தார்.
ஒருநாள் கொளுத்தும் வெயிலில், தோட்டத்தில் கரும்பு வெட்டிய தொழிலாளர்களுக்கு, முரகப்பா நான்கு லிட்டர் மோரில், சுவைக்கு தேவையான உப்பு, சர்க்கரை, ஏலக்காய் போட்டு லஸ்சி தயாரித்து கொடுத்தார். இதன் சுவையில் குஷியான தொழிலாளர்கள், 'இவ்வளவு சுவையான லஸ்சியை, நாங்கள் குடித்தது இல்லை.
மிகவும் சுவையாக உள்ளது. மார்க்கெட்டில் பணம் கொடுத்தாலும், இது போன்ற லஸ்சி கிடைக்காது' என மனமார புகழ்ந்தனர்.
தொழிலாளர்களின் பேச்சு, முரகப்பாவுக்கு ஊக்கம் அளித்தது. 50,000 ரூபாய் முதலீடு செய்து, லஸ்சி தொழிலை துவக்கினார். இதற்கு 'ஓம்கார் லஸ்சி' என பெயர் வைத்து விற்பனை செய்தார். 50,000 ரூபாய் முதலீட்டில் துவங்கிய தொழில், இப்போது லட்சக்கணக்கான ரூபாய் கொண்ட பிரம்மாண்ட தொழிலாக மாறியுள்ளது. தினமும் 200 கிராம் கொண்ட, 4,000 பாக்கெட்டுகள் விற்பனையாகின்றன.
இவரது லஸ்சிக்கு, கிராமப்புறங்களில் மட்டுமின்றி, நகரங்களிலும் நல்ல 'டிமாண்ட்' உள்ளது. பெலகாவி முழுவதும் ஓம்கார் லஸ்சி பிரபலமடைந்துள்ளது.
மழை பெய்யவில்லை, விளைச்சல் கிடைக்கவில்லை என, புலம்பாமல் விவசாயம் சார்ந்த துணை தொழிலை செய்தால், விவசாயிகளும் தொழிலதிபராக உயரலாம் என்பதற்கு, முரகப்பா சிறந்த உதாரணமாக திகழ்கிறார்- நமது நிருபர் -.