Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ தந்தைக்கு எதிராக மகளை நிறுத்த திட்டம்; சிவகுமாரின் சென்னப்பட்டணா வியூகம்

தந்தைக்கு எதிராக மகளை நிறுத்த திட்டம்; சிவகுமாரின் சென்னப்பட்டணா வியூகம்

தந்தைக்கு எதிராக மகளை நிறுத்த திட்டம்; சிவகுமாரின் சென்னப்பட்டணா வியூகம்

தந்தைக்கு எதிராக மகளை நிறுத்த திட்டம்; சிவகுமாரின் சென்னப்பட்டணா வியூகம்

ADDED : ஜூன் 26, 2024 08:48 AM


Google News
Latest Tamil News
தம்பி சுரேஷின் தோல்வியால் மனம் துவண்டு போயுள்ள துணை முதல்வர் சிவகுமார், சென்னபட்டணா தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று, கூட்டணி கட்சிகளை பழி தீர்க்க திட்டம் வகுத்துள்ளார். இடைத்தேர்தலில் பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணியில் யோகேஸ்வர் களமிறங்கினால், இவரது மகள் நிஷாவை காங்கிரஸ் வேட்பாளராக்க, சிவகுமார் ஆலோசிக்கிறார்.

துணை முதல்வர் சிவகுமார், கர்நாடக காங்கிரசில் செல்வாக்கு மிக்க தலைவர். கட்சி நெருக்கடியான சூழ்நிலையை சந்தித்த போது, உதவிக்கு வந்தவர். இவருக்கு, 'கனகபுரா பாறை' என்ற பட்டப்பெயர் உண்டு.

காங்கிரஸ் மேலிடத்திடம், இவருக்கு தனி மதிப்பு உள்ளது. ஆனால் இவ்வளவு செல்வாக்கு, திறன் இருந்தும் அவரது முதல்வர் கனவு நிறைவேறவில்லை. இவருக்கு சித்தராமையா முட்டுக்கட்டையாக நிற்கிறார்.

செல்வாக்கு சரிவு


மாநில தலைவராகவே இருந்தாலும், கட்சியில் சிவகுமாரின் செல்வாக்கு, நாளுக்கு நாள் சரிவதாக ஆதரவாளர்கள் வருந்துகின்றனர். இதற்கு உதாரணம், பெங்களூரு ரூரலில் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வி. லோக்சபா தேர்தலில் பெங்களூரு ரூரல் தொகுதியில், சிவகுமாரின் தம்பி சுரேஷுக்கு கட்சி மீண்டும் 'சீட்' கொடுத்திருந்தது. பா.ஜ., வேட்பாளராக டாக்டர் மஞ்சுநாத் களத்தில் இருந்தார். இவர் அரசியலுக்கு புதிய முகம்; ஆனால் மக்களுக்கு நன்கு அறிமுகமானவர்.

இதை அறிந்தே இவரை, பா.ஜ., அரசியலுக்கு அழைத்து வந்து, சுரேஷுக்கு எதிராக நிறுத்தியது. இம்முறை போட்டி கடுமையாக இருக்கும் என்பதை உணர்ந்த சிவகுமார், மற்ற தொகுதிகளை விட பெங்களூரு ரூரலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்.

தீவிர பிரசாரமும் செய்தார். ஆனால் இவரது முயற்சி பலன் அளிக்கவில்லை. மஞ்சுநாத் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

சுரேஷின் தோல்வியை காங்., மேலிடம் எதிர்பார்க்கவில்லை. எந்த தொகுதியில் பின்னடைவு ஏற்பட்டாலும், பெங்களூரு ரூரல் கை கொடுக்கும் என, எதிர்பார்த்தது. ஆனால், அது பொய்த்து போனது. அரசில் துணை முதல்வராக இருந்தும், தன் தம்பியை வெற்றி பெற வைக்க முடியாததை சிவகுமாரால் ஜீரணிக்க முடியவில்லை.

அரசியல் எதிர்காலம்


சுரேஷின் அரசியல் எதிர்காலத்தை மனதில் கொண்டு, கனகபுரா தொகுதியை விட்டுத்தர சிவகுமார் ஆலோசிக்கிறார். ராம்நகரின் சென்னபட்டணா தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்த குமாரசாமி, மாண்டியா லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்று, தற்போது மத்திய கனரக தொழில்கள் துறை அமைச்சராகி உள்ளார். இவரால் காலியான சென்னபட்டணா தொகுதிக்கு, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட வேண்டும்.

சென்னபட்டணா தொகுதி இடைத்தேர்தலை, சிவகுமார் இமேஜ் பிரச்னையாக கருதுகிறார். முதலில் இந்த தொகுதியில், தன் தம்பி சுரேஷை களமிறக்க ஆலோசித்தார். சென்னபட்டணா ம.ஜ.த.,வின் பாதுகாப்பு கோட்டை; இக்கட்சி வலுவாக உள்ளது. சுரேஷ் வெற்றி பெறுவது கடினம். எனவே, தானே களமிறங்க சிவகுமார் ஆர்வம் காண்பிக்கிறார்.

ஒரு வேளை சென்னபட்டணாவில் சிவகுமார் வென்றால், தன் தொகுதியான கனகபுராவில் தம்பியை வெற்றி பெற வைத்து, எம்.எல்.ஏ.,வாக்கி அவருக்கு அரசியல் மறுவாழ்வு தருவது, சிவகுமாரின் எண்ணமாகும்.

திடீர் பாசம்


எனவே, ஒன்றரை ஆண்டாக சென்னபட்டணாவை கண்டு கொள்ளாத அவருக்கு, தற்போது தொகுதி மீது அதிகமான பற்று ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது அங்கு செல்கிறார்; மக்கள் தொடர்பு கூட்டம் நடத்துகிறார்.

சென்னபட்டணா தொகுதிக்கு, பா.ஜ., - ம.ஜ.த., இன்னும் வேட்பாளரை முடிவு செய்யவில்லை. முன்னாள் அமைச்சர் யோகேஸ்வர் அல்லது ம.ஜ.த., இளைஞர் பிரிவு தலைவர் நிகில் குமாரசாமி போட்டியிடும் வாய்ப்புள்ளது. ஆனால் நிகில் போட்டியிட மாட்டார் என, குமாரசாமி கூறியதால், யோகேஸ்வர் களமிறங்கும் வாய்ப்பு அதிகம்.

யோகேஸ்வர் போட்டியிட்டால், கூட்டணி கட்சிகளுக்கு எதிராக, புதிய அஸ்திரத்தை பயன்படுத்த சிவகுமார் திட்டமிட்டுள்ளார். யோகேஸ்வரின் மகள் நிஷாவை, சென்னபட்டணாவில் களமிறக்க தயாராகிறார். சமீபத்தில் நிஷா, சிவகுமாரை சந்தித்தார். தன் தந்தை மீது பல குற்றச்சாட்டுகளை அடுக்கினார். காங்கிரசில் இணையும் விருப்பத்தை தெரிவித்திருந்தார். அப்போது சிவகுமார் சம்மதிக்கவில்லை.

ஆனால், இப்போது சூழ்நிலை மாறியுள்ளது. நிஷாவை காங்கிரசில் சேர்த்து, சென்னபட்டணாவில் யோகேஸ்வருக்கு எதிராக களமிறக்க சிவகுமார் ஆர்வம் காண்பிக்கிறார். தந்தை - மகள் போட்டியால் தொகுதியில் அனல் பறக்கும் எனவும் எதிர்பார்க்கிறார். விரைவில் நிஷா, காங்கிரசில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us