சென்னபட்டணாவில் சிவகுமார் போட்டி? பா.ஜ., - எம்.எல்.ஏ., சுரேஷ்குமார் கிண்டல்!
சென்னபட்டணாவில் சிவகுமார் போட்டி? பா.ஜ., - எம்.எல்.ஏ., சுரேஷ்குமார் கிண்டல்!
சென்னபட்டணாவில் சிவகுமார் போட்டி? பா.ஜ., - எம்.எல்.ஏ., சுரேஷ்குமார் கிண்டல்!
ADDED : ஜூன் 21, 2024 05:52 AM

பெங்களூரு: சென்னபட்டணா தொகுதி இடைத்தேர்தலில், துணை முதல்வர் சிவகுமார் போட்டியிட, ஆர்வம் காண்பிப்பதற்கு பா.ஜ., முன்னாள் அமைச்சர் சுரேஷ்குமார் ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில், பெங்களூரு ரூரல் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சுரேஷ் களமிறங்கி, தோல்வி அடைந்தார்.
கர்நாடக காங்கிரசின் செல்வாக்குமிக்க தலைவரான, துணை முதல்வர் சிவகுமாரின் தம்பியாக இருந்தும், அவரால் வெற்றி பெற முடியவில்லை. இது, சிவகுமாருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. 40 ஆண்டுகளாக நடந்து வரும் தேவகவுடா, சிவகுமார் குடும்பத்தினர் இடையிலான அரசியல் போராட்டத்தில், தற்போது தேவகவுடாவின் கை ஓங்கியுள்ளது.
பழிவாங்க திட்டம்
இதை, சிவகுமாரால் ஜீரணிக்க முடியவில்லை. குமாரசாமி மத்திய அமைச்சரானதால், காலியான சென்னபட்டணா சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், இந்த தொகுதியை கைப்பற்றி தோல்விக்கு பழிவாங்க, சிவகுமார் காத்திருக்கிறார்.
முதலில் தொகுதியில் தன் தம்பி சுரேஷை களமிறக்க ஆலோசித்தார். ஆனால் இவருக்கு பதிலாக, தானே களமிறங்க சிவகுமார் விரும்புகிறார்.
இது குறித்து, பேஸ்புக்கில் பா.ஜ., -- எம்.எல்.ஏ., சுரேஷ் குமார் கூறியதாவது:
சென்னபட்டணா இடைத்தேர்தலில், சிவகுமார் போட்டியிட ஆர்வம் காண்பிப்பது தேவையற்ற முயற்சியாகும். இவரின் தனிப்பட்ட கவுரவ பிரச்னைக்காக, பொது மக்களின் பணம், நாட்டின் சொத்துகளை வீணாக்க முற்பட்டுள்ளனர். இதை தான் 'துக்ளக் தர்பார்' என்பர்.
கனகபுராவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிவகுமார், 2028 வரை எம்.எல்.ஏ.,வாக பணியாற்ற வாய்ப்புள்ளது. இந்த வாய்ப்பை விட்டு விட்டு, சென்னபட்டணா இடைத்தேர்தலில் போட்டியிட நினைப்பது அர்த்தம் அற்றது. இவரது செயல் விவேகமானது அல்ல. இதை காங்., தலைவர் ராகுல் ஒப்பு கொள்வாரா.
துக்ளக் தர்பார்
வரலாற்றில் ஒரு நபர், தலைநகரை டில்லியில் இருந்து ஆயிரக்கணக்கான மைல் தொலைவில் உள்ள, மஹாராஷ்டிராவின் தவுலதாபாத்துக்கு மாற்றினார்.
அதன்பின் இங்கிருந்து மீண்டும் டில்லிக்கு மாற்றினார். இந்த நபரின் பெயர் எப்போதும் நினைவில் நிலைத்துள்ளது. இதை 'துக்ளக் தர்பார்' என, கூறுவர்.
சென்னபட்டணாவில் போட்டியிட்டு வெற்றி பெற்று, தன்னால் காலியாகும் கனகபுரா தொகுதியில், லோக்சபா தேர்தலில் தோற்ற தன் தம்பி சுரேஷை களமிறக்கி, எம்.எல்.ஏ.,வாக்க சிவகுமார் திட்டமிட்டதாக, ஊடகங்களில் செய்தி வந்துள்ளது. இது விவேகமற்ற செயலாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.