இடுக்கியில் 2500 ஆண்களுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்த அடையாளங்கள்
இடுக்கியில் 2500 ஆண்களுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்த அடையாளங்கள்
இடுக்கியில் 2500 ஆண்களுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்த அடையாளங்கள்
ADDED : மார் 14, 2025 02:29 AM

மூணாறு,:இடுக்கி மாவட்டம் கட்டப்பனை அருகே கோச்ரா, ஆனப்பாறை பகுதியில் 2 ஆயிரம் முதல் 2500 ஆண்டுகளுக்கு முன்பு பழங்கால மனிதர்கள் வாழ்ந்த குடியிருப்புகளின் அடையாளங்கள் கண்டு பிடிக்கப்பட்டன.
இடுக்கியை சேர்ந்தவரும், தற்போது சதுரங்கபாறை கிராம அலுவலருமான ராஜேஷ் ' இடுக்கி வரலாற்று பதிவுகள்' எனும் புத்தகம் எழுதினார். அதில் கட்டப்பனை அருகே கோச்ரா, ஆனப்பாறை பகுதியில் பழங்கால மனிதர்கள் வசித்ததற்கான அடையாளங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து ராஜேஷ் தொல்லியல் துறையினரிடம் தெரிவித்தார். அப்பகுதியில் இந்திய தொல்லியல்துறையின் உத்தரவுபடி ராஜப்பன் என்பவரது இடத்தில் கேரளா வரலாற்று ஆராய்ச்சி குழு இயக்குனர் தினேஷன் தலைமையில் ஆய்வு அதிகாரி தினேஷ் கிருஷ்ணன், தஞ்சாவூர் தமிழ் பல்கலை பேராசிரியர் செல்வகுமார் உள்பட 20 பேர் கொண்ட குழு அகழாய்வு நடத்தியது. 2024 டிசம்பர் 3 துவங்கிய பணி 2025 பிப்ரவரி 28ல் நிறைவு பெற்றது. அதில் 2 ஆயிரம் முதல் 2500 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வசித்ததற்கான குடியிருப்பு அடையாளங்கள் கண்டு பிடிக்கப்பட்டன.
இதன் மூலம் கேரளாவில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் முதன் முறையாக கண்டுபிடிக்கப்பட்டது. தவிர இந்தோ- பசிபிக் கிரிஸ்டல் மணிகள், கல் மணிகள், சிகப்பு மற்றும் வெள்ளை நிற கார்னிலியன் மணிகள், கருப்பு, சிகப்பு மண்பாண்டங்கள், வெள்ளை நிற கோடுகள் கொண்ட மண்பாண்டங்கள், கத்தி உள்பட இரும்பு பொருட்கள் உள்பட பல்வேறு பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டன. குறிப்பாக அம்பு, ஈட்டி முனை, கத்தி, அரிவாள், கரண்டி உள்பட 379 இரும்பு பொருட்கள், இந்தோ பசிபிக் சிகப்பு, பச்சை நிற முத்துக்கள் 236, அரிதான சிகப்பு கார்னிலியன் முத்துக்கள் 45, கருப்பு நிறம் பதித்த 51 வெள்ளை கார்னிலியன் முத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதற்கு முன்பு அரிதான சிகப்பு கார்னிலியன் முத்துக்கள் மஹாராஷ்ரா, குஜராத் மாநிலங்களில் மட்டும் கண்டு பிடிக்கப்பட்டன.
கேரளா வரலாற்று ஆராய்ச்சி குழு இயக்குனர் தினேஷன்,''கேரள வரலாற்றில் ஆனப்பாறையில் நடக்கும் அகழாய்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் மனித வாழ்விடத்தின் முதல் கண்டுபிடிப்பாகும். சிகப்பு, வெள்ளை நிற கோடுகள் கொண்ட மண்பாண்டங்கள் கி.மு. 3ம் நூற்றாண்டு முதல் கி.பி. 3ம் நூற்றாண்டுக்கு முன்பு வரை பயன் படுத்தப்பட்டவை என்பதால், 2 ஆயிரம் முதல் 2500 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்களை உறுதிபடுத்துகின்றன,'' என்றார்.