சித்தராமையா கைது செய்யப்படுவார்; பிரஹலாத் ஜோஷி ஆரூடம்
சித்தராமையா கைது செய்யப்படுவார்; பிரஹலாத் ஜோஷி ஆரூடம்
சித்தராமையா கைது செய்யப்படுவார்; பிரஹலாத் ஜோஷி ஆரூடம்
ADDED : ஜூலை 13, 2024 05:20 AM

பெங்களூரு : ''மூடா முறைகேட்டில் முதல்வர் சித்தராமையா கைது செய்யப்படலாம். அவசியம் ஏற்பட்டால் நாங்கள் சட்ட போராட்டம் நடத்துவோம்,'' என, மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
மூடாவில் பெறப்பட்ட வீட்டுமனை, தன் மனைவி பெயரில் இருப்பதாக சித்தராமையா கூறியுள்ளார்.
இவர் முதல்வர் பதவிக்கு வந்த பின், இந்த விஷயத்தை கவனித்து, மனையை வாபஸ் கொடுத்திருக்க வேண்டும்.
இதற்கு பொறுப்பேற்று, அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
கடந்த 1985ல், இந்திரா சர்வாதிகாரியாக இருந்தார். 2024ல் சித்தராமையா சர்வாதிகாரியாக இருக்கிறார். எங்களுக்கு போராட்டம் நடத்த உரிமை இல்லையா?
காங்கிரசுக்கு மேலிடம் இருந்தால், முதல்வர் சித்தராமையாவை ராஜினாமா செய்ய சொல்லுங்கள். இந்திராவும் இப்படித்தான் இருந்தார். தன்னை தடுப்பவர் யாரும் இல்லை என, கருதினார்.
ராகுல், அரசியல் சாசனத்தின் பெயரில் பதவிப் பிரமாணம் செய்தார். கர்நாடகாவில் நடக்கும் ஊழலுக்கு அவர் என்ன சொல்கிறார்? இடமாற்றத்தில் ஊழல் நடந்துள்ளதாக, முதல்வரின் பொருளாதார ஆலோசகர் பசவராஜ் ராயரெட்டி தெரிவித்தார்.
சித்தராமையா 2023ல், சட்டசபை தேர்தலில் தாக்கல் செய்த அபிடெவிட்டில், எட்டு கோடி ரூபாய் சொத்து என அறிவித்துள்ளார். தற்போது 62 கோடி ரூபாய் வர வேண்டும் என்கிறார். ஒரே ஆண்டில் இவ்வளவு விலை உயருமா?
பா.ஜ., மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி, ஜாமின் பெற்று மன்னிப்பு கேட்கும் கட்டத்துக்கு வந்துள்ளனர். காங்கிரஸ் டி.என்.ஏ.,விலேயே ஊழல் உள்ளது. அதை அவரால் எப்படி விட முடியும்?
இந்த அரசில், இதற்கு முன்பும் கூட, ஒப்பந்ததாரர் வீட்டில் பல கோடி ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டது. கோணிப்பைகளில் பணத்தை நிரப்பி வைத்திருந்தார். அவருக்கு எஸ்.ஐ.டி., இதுவரை ஒரு நோட்டீசும் அளிக்கவில்லை. அவரை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று, எஸ்.ஐ.டி., டீ கொடுத்து அனுப்பினர்.
இவ்வாறு அவர் கூறினார்.