வால்மீகி ஆணைய முறைகேடு வழக்கு முன்னாள் அமைச்சர் நாகேந்திரா கைது
வால்மீகி ஆணைய முறைகேடு வழக்கு முன்னாள் அமைச்சர் நாகேந்திரா கைது
வால்மீகி ஆணைய முறைகேடு வழக்கு முன்னாள் அமைச்சர் நாகேந்திரா கைது
ADDED : ஜூலை 13, 2024 05:21 AM

பெங்களூரு : வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடு வழக்கில், காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் நாகேந்திராவை, அமலாக்கத் துறை கைது செய்து உள்ளது.
கர்நாடக பழங்குடியினர் நலத்துறைக்கு உட்பட்டது கர்நாடக வால்மீகி மேம்பாட்டு ஆணையம். இந்த ஆணையத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றியவர் சந்திரசேகர், 52.
ஆணையத்திற்கு அரசு ஒதுக்கிய 187 கோடி ரூபாய் நிதியில், 89 கோடி ரூபாய் சட்டவிரோதமாக வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டதாக கடிதம் எழுதி வைத்து விட்டு, கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்டார்.
ராஜினாமா
இந்த வழக்கு விசாரணையை சி.ஐ.டி.,யிடம் மாநில அரசு ஒப்படைத்தது. விசாரணையில் 94 கோடி ரூபாய் பல்வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டது தெரிந்தது.
சந்திரசேகர் தற்கொலைக்கு பொறுப்பேற்று, பழங்குடியினர் நலத் துறை அமைச்சராக இருந்த நாகேந்திரா பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுத்தன. இதனால், நாகேந்திரா அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேட்டில் பெங்களூரு எம்.ஜி., ரோட்டில் உள்ள யூனியன் வங்கிக்கும் தொடர்பு இருப்பது தெரிந்தது.
வங்கியின் மண்டல மேலாளர் மகேஷ் அளித்த புகாரில், சி.பி.ஐ.,யும் தனியாக விசாரித்து வந்தது. சி.பி.ஐ., நடத்திய விசாரணையில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் குறித்து தகவல் கிடைத்ததால், அமலாக்கத் துறைக்கு அத்தகவல்களை அளித்தது.
இதையடுத்து, கடந்த 10ம் தேதி முன்னாள் அமைச்சர் நாகேந்திரா, வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தின் தலைவரும், ராய்ச்சூர் ரூரல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வுமான பசனகவுடா தத்தல் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்கள் உட்பட 18 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.
சோதனை 10ம் தேதி நள்ளிரவு வரை நீடித்தது. நேற்று முன்தினம் காலை துவங்கி மாலை வரை இரண்டாவது நாளாகவும் சோதனை நீடித்தது.
எனக்கு தெரியாது
சோதனைக்கு இடையிலும் நாகேந்திரா, தத்தலிடம் அமலாக்கத் துறையினர் விசாரித்து வந்தனர். நேற்று முன்தினம் இரவுடன் சோதனை நிறைவு பெற்றது.
சோதனையின் போது கிடைத்த சில ஆவணங்களை அமலாக்கத் துறையினர் எடுத்துச் சென்றனர்.
இந்நிலையில், நேற்று காலை 9:00 மணிக்கு பெங்களூரு டாலர்ஸ் காலனியில் உள்ள நாகேந்திரா வீட்டிற்கு அமலாக்கத் துறையினர் சென்றனர். 'உங்களிடம் விசாரணை நடத்த வேண்டும்' என்று கூறி, சாந்தி நகரில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.
காலை 10:00 மணி முதல், அவரிடம் விசாரணை துவங்கியது. சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
பெரும்பாலான கேள்விகளுக்கு, 'எனக்கு எதுவும் தெரியாது' என்றே நாகேந்திரன் பதில் அளித்துள்ளார்.
இந்நிலையில், இரவு 8:30 மணிக்கு நாகேந்திராவை, அமலாக்கத் துறை கைது செய்தது. இதையடுத்து, அவரை பவுரிங் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, அவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறை தயாராகி வருகிறது.
என்னை கைது செய்யுங்க
கெஞ்சிய தத்தல்
இதற்கிடையில், வால்மீகி ஆணைய நிதி முறைகேடு குறித்து, மாநில அரசின் சி.ஐ.டி.,யும் ஒரு பக்கம் விசாரணை நடத்துகிறது. நேற்று முன்தினம் விசாரணைக்கு ஆஜரான ஆணைய தலைவர் பசனகவுடா தத்தல், சி.ஐ.டி., அதிகாரிகளிடம் தன்னை கைது செய்யுங்கள் என்று கெஞ்சியதாக சொல்லப்படுகிறது.
அதாவது, 'அமலாக்கத்துறை கைது செய்தால் பிரச்னையை சந்திக்க நேரிடும் என்பதால், எஸ்.ஐ.டி.,யிடம் தத்தல் கெஞ்சியது தெரியவந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் இருந்து தத்தலை தொடர்புகொள்ள முடியவில்லை. அவர் தலைமறைவாக இருக்கலாம் என்று தெரிகிறது.
இரும்புத் தாது கடத்தல்
வழக்கில் கைதானவர்
முறைகேடு வழக்கில் நாகேந்திரா கைது செய்யப்படுவது இது முதல்முறை அல்ல. 2008 -- 2013 பா.ஜ., ஆட்சியில், நாகேந்திரா கூட்லகி பா.ஜ., - எம்.எல்.ஏ.,வாக இருந்தார். அப்போது, பல்லாரியில் உள்ள கனிம சுரங்கத்திலிருந்து இரும்புத் தாதுக்களை சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்து அரசுக்கு 1,300 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்படுத்திய வழக்கில், நாகேந்திரா கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கை சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் நாகேந்திரா ஜாமினில் இருப்பது குறிப்பிடத்தக்கது.