ADDED : ஜூலை 16, 2024 05:51 AM

பெங்களூரு : ''பெண் சிசுக்களை கருவிலேயே அழிக்க முற்படுவோருக்கு, எளிதில் ஜாமின் கிடைக்காத வகையில், கடும் சட்டம் கொண்டு வரப்படும்,'' என, மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ், மேலவையில் தெரிவித்தார்.
கர்நாடக மேலவை கேள்வி நேரத்தில், பா.ஜ., உறுப்பினர் ரவியின் கேள்விக்கு பதிலளித்து, அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறியதாவது:
பெண் சிசுக்களை கருவிலேயே அழிக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. பிரசவத்துக்கு முன்பே, கருவில் உள்ள சிசு பெண்ணாக இருந்தால் அதை அழிக்கும் டாக்டர்கள், மருத்துவ ஊழியர்களுக்கு எளிதில் ஜாமின் கிடைக்காத வகையில், சட்டம் பலப்படுத்தப்படும்.
கருக்கொலை குற்றச்சாட்டை எதிர்கொண்டு, கைதானவர்கள் எளிதில் ஜாமின் பெறுகின்றனர். அவர்களுடனான சட்டப்போராட்டத்தில், நாங்கள் தோற்றுள்ளோம். வரும் நாட்களில் இவற்றை சரி செய்ய முயற்சிக்கிறோம்.
பெண் குழந்தை கருவை கொல்வதை, எங்கள் துறை தீவிரமாக கருதுகிறது. ஒரே ஆண்டில் 23 வழக்குகள் பதிவாகியுள்ளன. 21 ஆண்டுகளில் 100க்கும் குறைவான வழக்குகள் பதிவாகின. ஆனால் ஒரே ஆண்டில் நாங்கள் 23 வழக்குகளை பதிவு செய்துள்ளோம். வருங்காலத்தில் இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.