சி.பி.ஐ., தொடர்ந்த சொத்து குவிப்பு வழக்கால் சிவகுமாருக்கு சிக்கல்!
சி.பி.ஐ., தொடர்ந்த சொத்து குவிப்பு வழக்கால் சிவகுமாருக்கு சிக்கல்!
சி.பி.ஐ., தொடர்ந்த சொத்து குவிப்பு வழக்கால் சிவகுமாருக்கு சிக்கல்!
ADDED : ஜூலை 16, 2024 05:52 AM

சி.பி.ஐ., தொடர்ந்துள்ள சொத்து குவிப்பு வழக்கால், கர்நாடக துணை முதல்வர் சிவகுமாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கை ரத்து செய்ய கோரி அவர் தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
கர்நாடகாவில், 2013 முதல், 2018 வரை முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்தது. அப்போது, நீர்ப்பாசன துறை அமைச்சராக இருந்தவர் தற்போதைய துணை முதல்வர் சிவகுமார்
இவர், வருமானத்துக்கு அதிகமாக முறைகேடாக சொத்து சேர்த்திருப்பதாக கூறி, இவரது வீடு, அலுவலகங்கள், உறவினர்கள் வீடுகள் என பல இடங்களில், 2017ல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
திஹார் சிறை
அப்போது, வருமானத்துக்கு அதிகமாக, 74.93 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை சிவகுமார் சம்பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், முறைகேடாக பண பரிமாற்றம் செய்திருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அமலாக்கத் துறை அதிகாரிகள் அவரை கைது செய்து, டில்லி திஹார் சிறையில் அடைத்தனர்.
பின், ஜாமினில் வெளியே வந்தார்.
இதற்கிடையில், அமலாக்கத் துறை வழக்கை ஆதாரமாக வைத்து, சிவகுமார் மீது வழக்கு தொடர அனுமதி அளிக்கும்படி, சி.பி.ஐ., தரப்பு, கர்நாடக அரசிடம் அனுமதி கோரியது. இதை ஏற்று, 2019 செப்டம்பர் 25ல், அப்போதைய மாநில பா.ஜ., அரசு அனுமதி வழங்கியது.
இதையடுத்து, 2020 அக்டோபர் 3ம் தேதி, சிவகுமார் மீது சி.பி.ஐ., தரப்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யும்படி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், சிவகுமார் மனு தாக்கல் செய்தார். இம்மனுவை, 2023 அக்டோபர் 19ல், உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மேல்முறையீடு
இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்திருந்தார்.
இம்மனு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் பேலா எம்.திரிவேதி, எஸ்.சி.சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, சிவகுமார் தரப்பில், மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்தகி வாதாடுகையில், ''ஏற்கனவே வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி, சிவகுமார் மீது வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த வழக்கில் சி.பி.ஐ.,யும் எப்படி விசாரணை நடத்த முடியும். இது சட்டத்துக்கு புறம்பானது,'' என்றார்.
இதற்கு நீதிபதிகள் கூறுகையில், 'ஏற்கனவே லஞ்ச ஒழிப்பு பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், இதில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது' என்றனர்.
3 மாதத்தில் அறிக்கை
மேலும், 'உயர் நீதிமன்றத்தின் உத்தரவில் தலையிட முடியாது' என்று கூறி, சிவகுமாரின் மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். அதுமட்டுமின்றி, சிவகுமார் மீதான வழக்கில் மூன்று மாதங்களுக்குள் விசாரணையை முடித்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யும்படியும், சி.பி.ஐ.,க்கு அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.
இந்த உத்தரவால், சிவகுமாருக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்குள் அவரிடம் விசாரணை நடத்த வேண்டிய கட்டாயம் சி.பி.ஐ.,க்குள் ஏற்பட்டுள்ளது. 'கர்நாடக அரசியலில் கொடி கட்டி பறக்கும் அவருக்கு, இந்த சொத்து குவிப்பு வழக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்' என, அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர்.