சதீஷ் துணை முதல்வர் ஆவார்: தம்பி லகன் ஜார்கிஹோளி உறுதி
சதீஷ் துணை முதல்வர் ஆவார்: தம்பி லகன் ஜார்கிஹோளி உறுதி
சதீஷ் துணை முதல்வர் ஆவார்: தம்பி லகன் ஜார்கிஹோளி உறுதி
ADDED : ஜூன் 06, 2024 10:07 PM

பெலகாவி: ''வரும் நாட்களில் சதீஷ் ஜார்கிஹோளி துணை முதல்வர் ஆவார்,'' என்று, அவரது தம்பியும், சுயேச்சை எம்.எல்.சி.,யுமான லகன் ஜார்கிஹோளி கூறி உள்ளார்.
ஜார்கிஹோளி சகோதரர்களில் ஒருவரான, சுயேச்சை எம்.எல்.சி., லகன் பெலகாவியில் நேற்று அளித்த பேட்டி:
தீவிர வேலை
சிக்கோடியில் எனது அண்ணன் சதீஷ் ஜார்கிஹோளியின் மகள் பிரியங்கா வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. சிக்கோடியில் பிரியங்கா, பெலகாவியில் ஜெகதீஷ் ஷெட்டர் வெற்றி பெற, நாங்கள் தீவிரமாக வேலை செய்தோம்.
முதல்வர், எதிர்க்கட்சி தலைவர், சபாநாயகர் உள்ளிட்ட பதவிகளில் இருந்தவர் ஜெகதீஷ் ஷெட்டர். அவரை பற்றி வாய்க்கு வந்ததை பேசியதால், பெலகாவியில் காங்கிரஸ் வேட்பாளர் மிருணாள் தோற்று போனார். சிக்கோடி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட அதானியில், காங்கிரசை விட பா.ஜ., அதிக ஓட்டு வாங்கி உள்ளது.
சட்டசபை தேர்தலில் அதானி எம்.எல்.ஏ., லட்சுமண் சவதி 85,000 ஓட்டுகள், வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரால் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஏன், கூடுதல் ஓட்டுகள் வாங்கி தர முடியவில்லை.
அரசு கவிழாது
கோகாக், அரபாவியில் எனது அண்ணன்கள் ரமேஷ் ஜார்கிஹோளி, பாலசந்திர ஜார்கிஹோளி எம்.எல்.ஏ.,க்களாக உள்ளனர். இருவரையும் மக்கள் நேசிக்கின்றனர். அவர்கள் யாருக்கு ஓட்டு போட கூறுகின்றனரோ, அவர்களுக்கு தான் ஓட்டு கிடைக்கும்.
காங்கிரஸ் அரசு கண்டிப்பாக கவிழாது. முதல்வராக அனுபவம் வாய்ந்த சித்தராமையா உள்ளார். அவரே ஐந்து ஆண்டுகளும் முதல்வராக இருப்பார். வரும் நாட்களில் சதீஷ் ஜார்கிஹோளி, துணை முதல்வர் ஆவார்.
அரசியலில் அவருக்கு அனுபவம் அதிகம். அவர் துணை முதல்வர் ஆனால், வடமாவட்டங்கள் வளர்ச்சி அடையும். நான் இப்போது சுயேச்சை எம்.எல்.சி.,யாக உள்ளேன். அடுத்த தேர்தலிலும் சுயேச்சையாக போட்டியிடுவேன்.
ஏதாவது ஒரு கட்சியில் இருந்தால், கட்சி மேலிடம் சொல்படி நடக்க வேண்டும். சுயேச்சை என்றால் சுதந்திரமாக செயல்படலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.