கட்சி மேலிடம் கூறினால் ராஜினாமா: அமைச்சர் செலுவராயசாமி அறிவிப்பு
கட்சி மேலிடம் கூறினால் ராஜினாமா: அமைச்சர் செலுவராயசாமி அறிவிப்பு
கட்சி மேலிடம் கூறினால் ராஜினாமா: அமைச்சர் செலுவராயசாமி அறிவிப்பு
ADDED : ஜூன் 06, 2024 10:07 PM

மாண்டியா : ''கட்சி மேலிடம் கூறினால் ராஜினாமா செய்வேன்,'' என்று, அமைச்சர் செலுவராயசாமி அறிவித்து உள்ளார்.
விவசாய அமைச்சர் செலுவராயசாமி, மாண்டியாவில் நேற்று அளித்த பேட்டி:
என்ன தவறு?
மாண்டியா லோக்சபா தொகுதியில், எங்கள் எதிர்பார்ப்பு பொய்யாகி உள்ளது. மக்கள் பெரிய எதிர்பார்ப்புடன், குமாரசாமிக்கு ஓட்டு போட்டு, அவரை வெற்றி பெற வைத்து இருக்கலாம். எங்களிடம் என்ன தவறை கண்டனர் என்று தெரியவில்லை. மாண்டியாவில் தேர்தல் முடிவுகள், ஒருதலைபட்சமாக அமைந்து உள்ளது. மாண்டியாவில் காங்கிரஸ் தோற்றது, எனக்கு சங்கடமாக இருக்கிறது. ஆனால் இனி எதுவும் செய்ய முடியாது.
கடந்த 2019 லோக்சபா தேர்தலின் போது, குமாரசாமி முதல்வராக இருந்தார். மாண்டியாவில் ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள் இருந்தும் நிகில் தோற்றார். தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம். வாக்குறுதி திட்டங்கள் காங்கிரசுக்கு கைகொடுக்கவில்லை என்பது உண்மை. இதற்காக வாக்குறுதி திட்டங்களை நிறுத்தும் எண்ணம், அரசிடம் இல்லை.
நல்ல மனிதர்
மாண்டியாவில் காங்கிரஸ் தோல்விக்கு பொறுப்பு ஏற்று, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும்படி, கட்சி மேலிடம் என்னிடம் உத்தரவிட்டால், ராஜினாமா செய்வேன். யார் அமைச்சராக இருக்க நீடிக்க வேண்டும் என்று, கட்சி மேலிடம் முடிவு எடுக்கும்.
முன்னாள் எம்.பி., சுமலதா புத்திசாலி. அவரை பற்றி வேறு எதுவும் பேச இல்லை. மத்திய அரசில் குமாரசாமிக்கு, அமைச்சர் பதவி கொடுத்தாலும், எங்களுக்கு கவலை இல்லை.
பா.ஜ., - ம.ஜ.த.,வால் காங்கிரஸ் அரசை கவிழ்க்க முடியாது. கர்நாடகாவில் இருந்து ஷோபா, பிரஹலாத் ஜோஷி, பகவந்த் கூபா, நாராயணசாமி மத்திய அமைச்சராக இருந்தனர். அவர்களால் மாநிலத்திற்கு என்ன பயன் கிடைத்தது.
குமாரசாமி மத்திய அமைச்சர் ஆனாலும், அதே நிலை தான். மாண்டியா காங்கிரஸ் வேட்பாளர் வெங்கடரமணே கவுடா நல்ல மனிதர். தேர்தலில் தோற்றதால் வருத்தமாக உள்ளார். அவரை சமாதானப்படுத்த வேண்டியது எங்கள் பொறுப்பு.
இவ்வாறு அவர் கூறினார்.