ADDED : ஜூலை 18, 2024 11:01 PM

பெங்களூரு: ''தற்போதைக்கு அரசு சொத்துக்களை விற்கும் திட்டம் ஏதும் அரசிடம் இல்லை. இது வெறும் யூகம்,'' என சிறிய நீர்ப்பாசன துறை அமைச்சர் போசராஜு மேலவையில் தெரிவித்தார்.
கர்நாடக மேலவை கேள்வி நேரத்தில், ம.ஜ.த., உறுப்பினர் திப்பேசாமி கேள்விக்கு பதிலளித்து அமைச்சர் கூறியதாவது:
அரசின் சொத்துக்களை விற்று, பணமாக்க அரசு திட்டமிட்டதாக வதந்தி பரவியுள்ளது. இத்தகைய ஆலோசனை ஏதும், அரசிடம் இல்லை. இது வெறும் யூகம் தான்.
அரசுக்கு சொந்தமான சொத்துகள் குறித்து, நிதித்துறை தகவல் மட்டுமே சேகரிக்கிறது. தகவல் சேகரிப்பதால், குழப்பம் ஏற்பட்டுள்ளது.
சொத்துகளை விற்பது, துறைகளின் தனிப்பட்ட விஷயமாகும். துறை ரீதியில் ஆலோசனை நடந்திருக்கலாம். ஆனால் அரசு தரப்பில் ஆலோசிக்கவில்லை. ஒருவேளை அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கலாம். இறுதி முடிவை முதல்வரே எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ம.ஜ.த., - திப்பேசாமி: வாக்குறுதி திட்டங்களால், அரசு கருவூலம் காலியாகியுள்ளது. மாநில அரசு கார்ப்பரேஷன், வாரியங்கள், ஆணையங்களின் சொத்துகளை விற்று, பணமாக்க முற்பட்டுள்ளது.
அமைச்சர் ஹெச்.டி.பாட்டீல்: இது நிதித்துறையின் தனிப்பட்ட விஷயமாகும். இந்த சபையில் விவாதிப்பது சரியல்ல.
திப்பேசாமி: வெளியாட்களை நிதி ஆலோசகராக நியமிக்க, அரசு முற்பட்டுள்ளது. நம் மாநிலத்திலேயே பொருளாதார வல்லுனர்கள் உள்ளனர். இவர்களை விட்டு விட்டு, போஸ்யான் நிறுவனத்திடம் நிதி ஆலோசனை கேட்க வேண்டிய அவசியம் என்ன.
இவ்வாறு விவாதம் நடந்தது.