ரூ.130 கோடி 'கோகைன்' குஜராத்தில் பறிமுதல்
ரூ.130 கோடி 'கோகைன்' குஜராத்தில் பறிமுதல்
ரூ.130 கோடி 'கோகைன்' குஜராத்தில் பறிமுதல்
ADDED : ஜூன் 05, 2024 11:26 PM
காந்திதாம்: குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தின் காந்திதாம் அருகே உள்ள கடற்கரையில் போதைப் பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு நேற்று அதிகாலை தகவல் கிடைத்தது.
இதையடுத்து பயங்கரவாத தடுப்பு படையினர், சிறப்பு அதிரடிப்படையினருடன் இணைந்து செயல்பட்டு, கட்ச் வளைகுடாவில் 13 பாக்கெட்டுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதைப் பொருளை மீட்டனர். பிடிபட்ட கோகைனின் சர்வதேச சந்தை மதிப்பு 130 கோடி ரூபாய்.
இது குறித்து, கட்ச் கிழக்கு பகுதி போலீஸ் எஸ்.பி., சாகர் பாக்மர் கூறுகையில், “கடந்த எட்டு மாதங்களில் இதே கடற்கரையில் சிக்கிய இரண்டாவது மிகப்பெரிய போதைப் பொருள் இது. இது தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்படுகிறது,” என்றார்.
முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பரில், கட்ச் கிழக்கு போலீசார் கடற்கரையில் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில், கேட்பாரற்று கிடந்த 1 கிலோ எடையுள்ள 80 பாக்கெட் கோகேன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் சர்வதேச சந்தை மதிப்பு 800 கோடி ரூபாய்.