சிறுவன் ஓட்டிய கார் மோதி உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.2 கோடி இழப்பீடு
சிறுவன் ஓட்டிய கார் மோதி உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.2 கோடி இழப்பீடு
சிறுவன் ஓட்டிய கார் மோதி உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.2 கோடி இழப்பீடு
ADDED : ஜூலை 17, 2024 09:18 PM
பாக்பத்,:சிறுவன் ஓட்டிச் சென்ற கார் மோதி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு 1.98 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க மோட்டார் விபத்து தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016 ஏப்ரல் 4ம் தேதி சிவில் லைன்ஸ் பகுதியில் சாலையை கடக்க முயன்ற சித்தார்த் சர்மா, 32, என்பவர் மீது மெர்சிடிஸ் பென்ஸ் கார் வேகமாக மோதியது. இதில் படுகாயமடைந்த சித்தார்த் சர்மா உயிரிழந்தார்.
விபத்து குறித்து விசாரணை நடத்திய போலீசார், தன் நண்பர்கள் ஆறு பேருடன் மைனர் சிறுவன் காரை ஓட்டி வந்ததை கண்டுபிடித்தனர். சிசிடிவி காட்சிகளும் சிறுவன் கவனக்குறைவாக கார் ஓட்டி வந்ததை உறுதிப்படுத்தியது. போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
உயிரிழந்த சித்தார்த்தின் பெற்றோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த மோட்டார் விபத்து தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பு:
மைனர் கார் ஓட்டக்கூடாது என்ற போக்குவரத்து விதியை சிறுவனின் தந்தை வேண்டுமென்றே மீறியது தெரிகிறது. மைனர் கார் ஓட்டுவதை அவர் தடுத்திருக்க வேண்டும். போக்குவரத்து விதிகளை தன் மகன் தொடர்ந்து மீறியதை அவர் கண்டுகொள்ளவில்லை.
இது மைனரின் சட்டவிரோத நடத்தையை அவர் வேண்டுமென்றே அனுமதித்ததை காட்டுகிறது. அவரது மவுனம், கார் ஓட்டுவதற்கு சம்மதம் என்ற அர்த்தத்தை கொடுக்கிறது.
மைனர் மகனை கார் ஓட்ட அனுமதிப்பது, மற்ற சாலை பயனர்களுக்கு பேரழிவை ஏற்படுத்தும் என்பதை உணர அவர் தவறிவிட்டார்.
மேற்கண்ட விபத்துக்கு அவர்களே காரணம். எனவே பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு பெறுவதற்கு உரிமை உண்டு. காரின் காப்பீடு நிறுவனமான ஹெச்.டி.எப்.சி., எர்கோ ஜெனரல் இன்சூரன்ஸ் கோ லிமிடெட், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடாக 1.21 கோடி ரூபாயும், வட்டியாக 77.61 லட்சம் ரூபாயும் வழங்க வேண்டும்.
பொறுப்பில் இருந்து விடுவிக்கக்கோரிய மைனரின் தந்தை மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. பறிமுதல் செய்வதற்கு இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்படுகிறது.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.