ரயில்வே சுரங்கப்பாதை பணி தாமதம் 2 மணி நேரம் பயணியர் பரிதவிப்பு
ரயில்வே சுரங்கப்பாதை பணி தாமதம் 2 மணி நேரம் பயணியர் பரிதவிப்பு
ரயில்வே சுரங்கப்பாதை பணி தாமதம் 2 மணி நேரம் பயணியர் பரிதவிப்பு
ADDED : ஜூலை 11, 2024 04:48 AM

பெங்களூரு : ஹெஜ்ஜாலா - கெங்கேரி இடையே ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணி தாமதமானதால், பெங்களூரு - மைசூரு வழித்தடத்தில் நேற்று காலையில் இரண்டு மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஹெஜ்ஜாலா - கெங்கேரி இடையே ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு துவங்கின. காலை 7:00 மணிக்குள் முடித்து விடலாம் என அதிகாரிகள் கருதினர். தவிர்க்க முடியாத காரணங்களால், பணி முடிவடைய தாமதமானது. இதனால் நேற்று காலை 7:00 மணி முதல் 9:00 மணி வரை பெங்களூரு - மைசூரு வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து பாதித்தது.
சென்னப்பட்டணா, ராம்நகர், பிடதி ஆகிய ரயில் நிலையங்களில், பல ரயில்கள் நிறுத்தப்பட்டன.
சிறிது நேரத்தில் ரயில் புறப்படும் என காத்திருந்த பயணியர், பொறுமை இழந்து, ரயிலில் இருந்து இறங்கி, அருகில் உள்ள பஸ் நிலையத்திற்கு சென்று, அங்கிருந்து பெங்களூரு வந்தனர். சிலர், அலுவலகத்துக்கு விடுமுறை கூறி விட்டு, பஸ் பிடித்து வீட்டுக்கு சென்று விட்டனர்.
மைசூரில் இருந்து புறப்பட்ட பயணி வித்யா கூறுகையில், ''மங்களூரில் இருந்து புறப்பட்ட ரயில், அதிகாலை 3:00 மணிக்கு மைசூரு வந்தடைந்தது. அங்கிருந்து 4:00 மணிக்கு புறப்பட்ட ரயில், காலை 11:00 மணிக்கு தான் பெங்களூரு வந்தடைந்தது.
''பிடதியில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக ரயில் நிறுத்தப்பட்டது. இதனால் அலுப்படைந்த பல பயணியர், பெங்களூரு செல்வதை விடுத்து, மீண்டும் மைசூருக்கு பஸ்சில் புறப்பட்டு சென்றுவிட்டனர்,'' என்றார்.
ரயில்வே சுரங்கப்பாதை பணி தாமதத்தால், பிடதி ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயில். இடம்: ராம்நகர்.