110 கிராமங்களுக்கு ஆகஸ்டில் காவிரி குடிநீர் வினியோகம்?
110 கிராமங்களுக்கு ஆகஸ்டில் காவிரி குடிநீர் வினியோகம்?
110 கிராமங்களுக்கு ஆகஸ்டில் காவிரி குடிநீர் வினியோகம்?
ADDED : ஜூலை 11, 2024 04:48 AM
பெங்களூரு : கோடைக்காலத்தில் குடிநீர் பிரச்னையை அனுபவித்த 110 கிராமங்களுக்கு ஆகஸ்ட் இரண்டாம் வாரம், காவிரி குடிநீரை வினியோகிக்க பெங்களூரு குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து பெங்களூரு குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
பெங்களூருக்கு தினமும் 1,450 எம்.எல்.டி., காவிரி நீரை, குடிநீர் வாரியம் வினியோகிக்கிறது. மாநகராட்சியில் சேர்க்கப்பட்ட 110 கிராமங்களுக்கு காவிரி குடிநீர் வழங்கும் நோக்கில், காவிரி ஐந்தாம் கட்ட திட்ட பணிகள் துவங்கப்பட்டன; தற்போது பெரும்பாலும் முடிந்துள்ளன.
சுதந்திர தின பரிசு
சோதனை முறையில் தண்ணீர் வினியோகிப்பது உட்பட சில பணிகள் பாக்கியுள்ளன. இதை விரைவில் முடித்து, ஆகஸ்ட் 15ல் சுதந்திர தின வேளையில், 110 கிராமங்களுக்கும் காவிரி குடிநீர் வினியோகிக்க திட்டமிட்டுள்ளோம்.
ஏற்கனவே காவிரி ஐந்தாம் கட்ட திட்டத்தின் காவிரி நீர், டி.கே.ஹள்ளி வரை வந்துள்ளது. பம்ப் ஹவுஸ்களுக்கு மின் இணைப்பு ஏற்படுத்தும் பணிகள் நடக்கின்றன.
பணிகளுக்கான பணத்தை, குடிநீர் வாரியம் ஏற்கனவே செலுத்திவிட்டது. லோக்சபா தேர்தல் மற்றும் மழையால் பணிகள் தாமதமாயின. 110 கிராமங்களில் காவிரி நீர் வினியோகிக்கும் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன.
ஜூலை 3ம் வாரம் முதல் சோதனை முறையில், குடிநீர் வினியோகம் துவங்கும். இது வெற்றியடைந்தால் ஆகஸ்ட் இரண்டாம் வாரம் 110 கிராமங்களுக்கும், காவிரி நீர் கிடைக்கும்.
இந்த கிராமங்களில் நான்கு லட்சம் வீடுகள் உள்ளன. குடிநீர் இணைப்பு பெற்றவர்களுக்கு, முதற்கட்டமாக வாரம் ஒன்றிரண்டு நாட்கள் குடிநீர் வினியோகிக்கப்படும். அதன்பின் அனைத்து நாட்களிலும் நீர் வழங்கப்படும்.
பெங்களூரு குடிநீர் வாரியம், ஏற்கனவே மாதந்தோறும் 75 கோடி ரூபாய் மின் கட்டணம் பில் செலுத்துகிறது. காவிரி ஐந்தாம் கட்ட குடிநீர் வினியோகம் துவங்கினால், மின் கட்டண பில் கூடுதலாக 25 கோடி ரூபாய் செலுத்த வேண்டி வரும்.
அதிக கட்டணம்
அதிகமானோர் குடிநீர் இணைப்பு பெற்று, அதிக கட்டணம் வசூலானால் மட்டுமே பொருளாதார சுமையை சமாளிக்க முடியும். இல்லையென்றால் அதிகாரிகள், ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்கவும் கஷ்டமான சூழ்நிலை ஏற்படலாம்.
காவிரி குடிநீர் வினியோகம் 110 கிராமங்களில் துவங்கிய பின், வார்டு அளவில் குடிநீர் வாரியம் முகாம் நடத்தும். குடிநீர் இணைப்பு பெறும்படி விழிப்புணர்வு ஏற்படுத்தும். மக்கள் குடிநீர் இணைப்பு பெற முன் வருவர் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.