ராகுல் எதிர்க்கட்சி தலைவராக காங்., செயற்குழுவில் தீர்மானம்
ராகுல் எதிர்க்கட்சி தலைவராக காங்., செயற்குழுவில் தீர்மானம்
ராகுல் எதிர்க்கட்சி தலைவராக காங்., செயற்குழுவில் தீர்மானம்
ADDED : ஜூன் 09, 2024 12:23 AM

புதுடில்லி: லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராகுல் ஏற்க வேண்டும் என, காங்., செயற்குழுக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அதை அவர் ஏற்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், காங்., தலைமையிலான 'இண்டியா' கூட்டணி, 235 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதில் காங்., மட்டும், 99 தொகுதிகளை கைப்பற்றியது. மஹாராஷ்டிராவின் சாங்லி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வென்ற விஷால் பாட்டீல், காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்ததை அடுத்து, லோக்சபாவில் காங்., - எம்.பி.,க்களின் எண்ணிக்கை, 100 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், டில்லி யில் உள்ள தனியார் ஹோட்டலில், காங்., செயற்குழுக் கூட்டம், கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நேற்று நடந்தது. இதில், காங்., முக்கிய தலைவர்கள் சோனியா, ராகுல், பிரியங்கா, ஜெய்ராம் ரமேஷ், வேணுகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.,க்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் காங்., தலைவர்களும் இதில் பங்கேற்றனர்.
இந்த செயற்குழுக் கூட்டத்தில், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராகுல் ஏற்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதே போல், ஜனநாயகம், அரசியலமைப்பை பாதுகாக்கவும், சமூக - பொருளாதார நீதியை மேம்படுத்தவும் ஓட்டளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில், மல்லி கார்ஜுன கார்கே பேசியதாவது:
லோக்சபா தேர்தலில் மக்கள் வழங்கிய தீர்ப்பு, பிரதமர் மோடிக்கு தனிப்பட்ட முறையில் தோல்வி. வெறுப்பு, பிளவுபடுத்தும் ஆட்சிக்கு எதிராக மக்கள் ஓட்டுகள் வாயிலாக பதிலடி கொடுத்துள்ளனர்.
இந்த தேர்தலில், காங்., மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை தெளிவாக தெரிகிறது. அவர்களின் நம்பிக்கையை நாம் இழக்கக் கூடாது.
ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், 24 மணி நேரமும், 365 நாட்களும் மக்களுக்காக நாம் பணியாற்றி, அவர்களது பிரச்னைகளை தீர்க்க வேண்டும்.
இவ்வாறு பேசினார்.
இதுகுறித்து காங்., பொதுச்செயலர் வேணுகோபால் கூறுகையில், ''எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்பது குறித்து விரைவில் முடிவை அறிவிப்பதாக ராகுல் தெரிவித்துள்ளார்,'' என்றார்.
இதைத் தொடர்ந்து மாலையில், பழைய பார்லி., கட்டடத்தில் உள்ள மைய மண்டபத்தில், காங்., - எம்.பி.,க்கள் குழுக் கூட்டம் நடந்தது. இதில், காங்., - பார்லி., குழுத் தலைவராக சோனியா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இக்கூட்டத்தில் சோனியா பேசியதாவது:
தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்காமல் மீண்டும் பிரதமராக பதவியேற்க, நரேந்திர மோடி ஆயத்தமாகி வருகிறார். மக்களின் விருப்பத்தை அறிந்து கொள்ளாமல், ஆட்சி அதிகாரத்திற்காக அவர் இப்படி நடந்து கொள்வார் என, நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
பார்லிமென்டில், ஜனநாயக நடைமுறைகளை சீர்குலைக்கும் எந்தவொரு செயலையும் அனுமதிக்கக் கூடாது. இவற்றை துவக்கத்திலேயே நாம் முறியடிக்க வேண்டும்.
காங்., மீது மக்கள் மீண்டும் நம்பிக்கை வைத்துள்ளனர். இதை அப்படியே தொடர வேண்டும்.
பார்லி.,யில் நம் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் நமக்கு பொறுப்பு இன்னும் அதிகரித்துள்ளது. நாட்டு மக்களின் நலனுக்காக மட்டுமே எப்போதும் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராகுல் ஏற்பாரா என்ற எதிர்பார்ப்பு காங்., கட்சியினரிடையே எழுந்துள்ளது.