சொத்து வரி வட்டி தள்ளுபடி; ஜூலை 31 கடைசி தேதி
சொத்து வரி வட்டி தள்ளுபடி; ஜூலை 31 கடைசி தேதி
சொத்து வரி வட்டி தள்ளுபடி; ஜூலை 31 கடைசி தேதி
ADDED : ஜூன் 11, 2024 11:59 PM

பெங்களூரு : ''பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட சொத்து வரி பாக்கியை செலுத்த, ஒருமுறை நிவாரண திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. ஜூலை 31ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. எக்காரணம் கொண்டும் நீட்டிக்கப்படாது,'' என துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
பெங்களூரு மாநகராட்சி சட்டப்படி, சொத்து வரி பாக்கியை வசூலிக்க வேண்டும். இருப்பினும், பொது மக்களுக்கு வசதியாக ஓ.டி.எஸ்., எனப்படும் ஒருமுறை நிவாரண திட்டம் முறையை, அரசும், மாநகராட்சியும் அமல்படுத்தி உள்ளன.
இத்திட்டத்தின் கீழ், சொத்து வரி பாக்கிக்கு செலுத்த வேண்டிய வட்டி, முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். இதை பயன்படுத்தி கொள்ளுங்கள். அரசுக்கு வரவேண்டிய சொத்து வரி, 5,230 கோடி ரூபாய் பாக்கி உள்ளது. பெங்களூரில் 20 லட்சம் சொத்துகளை அடையாளம் கண்டுள்ளோம். ஏற்கனவே, 8.6 லட்சம் சொத்து உரிமையாளர்கள் வரி செலுத்தி உள்ளனர்.
இதுவரை 1,300 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது. மீதமுள்ள 3,900 கோடி ரூபாய் சொத்து வரி பாக்கி உள்ளது. இதை செலுத்த ஜூலை 31ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. எக்காரணம் கொண்டும் நீட்டிக்கப்படாது.
வரி வரம்புக்குள் வராமல் பலர் உள்ளனர். அவர்கள் முறையான ஆவணங்களை வழங்கினால், 90 நாட்களுக்குள் அதை மதிப்பாய்வு செய்வோம். பதிவை சரி பார்த்த பின், அதற்கு ஏற்ப 'ஏ' அல்லது 'பி' கணக்கு கொடுக்கப்படும்.
பெங்களூரில் 20 லட்சம் சொத்துகளின் ஆவணங்கள் 'ஸ்கேனிங்' செய்யப்பட்டு வருகிறது. இதில், 8 லட்சம் ஆவணங்கள் ஏற்கனவே ஸ்கேனிங் செய்யப்பட்டு உள்ளது. மூன்று மாதங்களுக்குள் இவை அனைத்தையும் ஸ்கேன் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்களின் கணக்கு விபரங்கள், அவர்களின் வீடுகளுக்கே சென்றடையும்.
சொத்து வரியை https://bbmptax.karnataka.gov.in என்ற இணையதளத்திலும் செலுத்தலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.